இஸ்ரேல்-ஈரான் மோதலில் நேரடியாக ஈடுபட திட்டமா?
அடுத்த 2 வாரங்களுக்குள் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

வாஷிங்டன், ஜூன்.20; இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபவதா இல்லையா என்பதை அடுத்த 2 வாரங்களுக்குள் அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், அதிபர் டிரம்பிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியை வெளியிட்டார்.
அடுத்த 2 வாரங்களுக்குள் முடிவு: அதிபர் டிரம்ப்

அதில், “எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இதுபற்றி நான் எனது முடிவை எடுப்பேன்” என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா தலையிட்டால் பிராந்தியம் நரகமாக மாறும்: ஈரான்

முன்னதாக, பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி (Majid Takht-Ravanchi),இஸ்ரேல்-ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் அது பிராந்தியத்தை நரகமாக மாற்றும் என்று கூறினார். மேலும் “இது அமெரிக்காவின் போர் அல்ல” என்றும் ஈரான் வெளியுறவு இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் மோதலில் இணைவது குறித்து டிரம்ப் இதுவரை முடிவு செய்யவில்லை என்று கூறிய 24 மணி நேரத்திற்குப் பின்னர் ஈரான் வெளியுறவு இணை அமைச்சரின் செய்தி வந்திருக்கிறது.
“ஈரான் அணு ஆயுதம் உருவாக்காமல் இருப்பதற்கு முன்னுரிமை”

அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து கவலை கொண்ட அன்றாட டிரம்ப் ஆதவாளர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்டிடம் கேட்டபோது, “அதிபர் டிரம்ப் மீது நம்பிக்கை வையுங்கள்“ என பதிலளித்தார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அதிபர் டிரம்பின் முக்கிய முன்னுரிமை என்றும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.







