டாலிவுட் பிரபலங்களுக்கு தெலுங்கானா முதல்வர் புத்திமதி..

தெலுங்கானா: புஷ்பா 2 திரைப்பட கூட்ட நெரிசல் தொடர்பான விவகாரம் பெரிதாக உருவெடுத்துள்ள நிலையில் இன்று தெலுங்கானா திரைப்பட அபிவிருத்தி கழக தலைவர் தில்ராஜ் தலைமையில் திரைத்துறை பிரபலங்கள் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

சிறப்பு காட்சிகள் ரத்து
பேச்சு வார்த்தை கூட்டத்தில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, டாலிவுட்டிற்கு அரசு வழக்கம்போல் எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் திரைத்துறையினர் சமூக அக்கறை,பொறுப்பு ஆகியவற்றுடன் செயல்பட வேண்டும் என்றும், தெலுங்கானா மாநிலத்தில் இனிமேல் புதிய படங்கள் வெளியாகும் போது ரசிகர் காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என்றும் முதல்வர் கூறினார்.
மேலும் படிக்க: ‘புஷ்பா-2’ பட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்
பிரபலங்கள் மட்டுமே பொறுப்பு
தொடர்ந்து பேசிய அவர், திரையுலக பிரபலங்கள் வெளியில் வரும்போது ரசிகர்களை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டியது அந்தந்த பிரபலத்தின் பொறுப்பு என்றும், பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற பெயரில் பவுன்சர்கள் செய்யும் வேலைகள் மீது தீவிர கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரபலங்கள்
இதனைத் தொடர்ந்து திரை துறையினர் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் ஆலய சுற்றுலா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுற்றுலா, போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய சமூக அக்கறையுடன் தொடர்புடைய செயல்பாடுகளில் திரைத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார்.







