ஷபாலி வர்மா 197 ரன்கள் விளாசல்
390 ரன்கள் 'சேஸ்' செய்து பெங்கால் சாதனை

பெங்கால் மகளிர் அணிக்கு எதிரான தேசிய அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஹரியானா வீராங்கனை ஷபாலி வர்மா 197 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சீனியர் மகளிருக்கான ஒருநாள் போட்டி தொடர் நடத்தப்படுகிறது. நேற்று, ராஜ்கோட்டில் நடந்த காலிறுதி போட்டி ஒன்றில், ஹரியானா, பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ‘டாஸ்’ வென்ற பெங்கால் மகளிர் அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

ஹரியானா அணிக்கு தொடக்க வீரர்கள் ரீமா – ஷபாலி வர்மா சிறப்பான துவக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஷபாலி வர்மா சதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்த போது அரைசதம் விளாசிய (58) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஷபாலி, 115 பந்தில் 197 ரன்களில் (11 சிக்சர், 22 பவுண்டரி) அவுட்டாகி இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். இழந்தார். இறுதியில் 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 389 ரன்கள் குவித்தது ஹரியானா.

389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை விரட்டிய பெங்கால் மகளிர் அணிக்கு, சர்கார் (113), பாலா (88*), தாரா (69), சஸ்தி (52) சிறப்பாக விளையாடி வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதன் பயனாக 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்து, பெங்கால் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ‘டி-20’ மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு பின்பு ஷபாலி வர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது சீனியர் ஒருநாள் தொடரில் 7 போட்டியில், 2 சதம், 2 அரை சதம் உட்பட 527 ரன் கள்குவித்து, இழந்த ‘பார்மை’ மீட்டுள்ளார் ஷபாலி. இதனால் இந்திய அணியில் தமது இடத்தை மீண்டும் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஹரியானாவை வீழ்த்திய பெங்கால் அணி, மகளிர் ‘லிஸ்ட்-ஏ’ போட்டியில் அதிக ரன்னை (390) ‘சேஸ்’ செய்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 2022ல் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 322 ரன்களை, நியூசிலாந்து பெண்கள் அணி ‘சேஸ்’ செய்ததுதான் (325/1, 44.3 ஓவர்) சிறந்த வெற்றியாக இருந்தது.








