மகா கும்பமேளாவில் நெரிசல்; 10 பேர் பலி
அரைவேக்காடு ஏற்பாடுகள் என காங்கிரஸ் சாடல்

பிரயாக்ராஜ், ஜன.29; உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில், இன்று அதிகாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. மௌனி அமாவாசையை முன்னிட்டு இன்று ஆற்றில் நீராட மகா கும்பமேளாவுக்கு குறைந்தது 10 கோடி பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
திரிவேணி சங்கமத்தில் நெரிசல்; பலர் பலி

அதன்படி, திரிவேணி சங்கமத்தில் நீராட இன்று அதிகாலை முதலே பெருந்திரளான பக்தர்கள் வரத் தொடங்கினர்.
அப்போது கடும் நெரிசல் ஏற்பட்டதால், பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் நேரிட்டது. இதில் ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்

நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள், அங்கேயே அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
நிகழ்வு குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவம் நிகழ்ந்த திரிவேணி சங்கமம் பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
திரிவேணி சங்கமத்தில் அதிகாரிகள் ஆய்வு

தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் முதலமைச்சர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அரைவேக்காடு ஏற்பாடுகள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகா கும்பமேளா துயரம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அரைகுறையான ஏற்பாடுகள், முக்கியப் பிரமுகர்களின் நடமாட்டம், சுயவிளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது மற்றும் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என குற்றஞ்சாட்டி உள்ளார்.
மகா கும்பமேளா நிர்வாகத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைவிட சிறந்த நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருக்கும் காங்கிரஸ், முக்கிய பிரமுகர்களின் நடமாட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.







