“சென்னையில் பனிமூட்டம் இல்லையே..!!”
ஹாரி புரூக்கை கிண்டலடித்த ரவி சாஸ்திரி, கவாஸ்கர்

சென்னை, ஜன.26; கொல்கத்தாவில், பனிமூட்டம் காரணமாக வருண் சக்கரவர்த்தியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது கடினமாக இருந்ததாகக் கூறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் (Harry Brook) ஹாரி புரூக்கை ரவி சாஸ்திரியும், சுனில் கவாஸ்கரும் கிண்டலடித்துள்ளனர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
“கொல்கத்தாவில் பனிமூட்டத்தால் ஆட்டமிழந்தேன்”

பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஹாரி புரூக், “கொல்கத்தாவில் பனிமூட்டம் காரணமாக, வருண் சக்கரவர்த்தியின் சுழற்பந்து வீச்சை ஆடுவது கடினமாக இருந்தது” என்று கூறியினார்.
“ஆனால், இங்கு (சென்னை) காற்று சற்று தெளிவாக உள்ளதால், பந்தை சற்று எளிதாகப் பார்க்கலாம்; இருபது ஓவர் போட்டியில் சுழலை எதிர்கொள்வது கடினமான விஷயம்; நான் எப்போதும் சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்க முயற்சிக்கிறேன்” என்றும் ஹாரி புரூக் தெரிவித்தார்.
புரூக்கை கிண்டலடித்த ரவி சாஸ்திரி, கவாஸ்கர்

இதனைக் கிண்டலடித்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “ஹாரி புரூக்கிற்கு நல்ல செய்தி, இங்கு (சென்னை) பனிமூட்டம் இல்லை” எனக் கூறினார்.
பின்னர் நடந்த போட்டியில், முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில், வருண் சக்ரவர்த்தியின் சுழலில் ஹாரி புரூக் மீண்டும் ஆட்டமிழந்தார்.
அப்போது வர்ணனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர், “இங்கு வெளிச்சம் தெளிவாக உள்ளது. புகை மூட்டம் இல்லை” என்று ஹாரி புரூக்கை கிண்டலடித்தார்.







