கருண் நாயர் புதிய உலக சாதனை
'லிஸ்ட் ஏ' போட்டிகளில் அதிக ரன்கள் குவிப்பு

உலக அளவில் ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அவுட்டாகாமல் 542 ரன்கள் குவித்து, இந்தியாவின் கருண் நாயர் புதிய உலக சாதனைப் படைத்து இருக்கிறார்.
நேற்று ஆந்திராவின் விஜயநகரத்தில் நடந்த விஜய் ஹராரே கிரிக்கெட் டிராபி தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், விதர்பா மற்றும் உத்தரப்பிரதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய உத்தரபிரதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. அவ்வணியின் சமீர் ரிஸ்வி 105 ரன்கள் குவித்தார். விதர்பா சார்பில் நாச்சிகேட் புட் 4 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் ஆடிய விதர்பா அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 313 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதில் விதர்பா கேப்டன் கருண் நாயர் 112, யாஷ் ரதோத் 138* ரன்கள் குவித்தனர். இருவரின் அபார ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது விதர்பா அணி.

நடப்பு விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக 112, சத்தீஸ்கருக்கு எதிராக 44, சண்டீகருக்கு எதிராக 163, தமிழ்நாட்டுக்கு எதிராக 111 ரன்களை கருண் நாயர் அவுட்டாகாமல் குவித்து இருந்தார். தற்போது விதர்பாவுக்கு எதிராக 112 ரன்கள் எடுத்து அவுட்டானதன் மூலம், மொத்தமாக 542 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் கருண் நாயர்.

கடந்த 2010ல் உலகளவில் ‘லிஸ்ட் ஏ’ பிரிவு போட்டிகளில் அவுட்டாகாமல் தொடர்ச்சியாக 527 ரன்கள் குவித்து நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளின் உலக சாதனைப் படைத்து இருந்தார். அதனை முறியடித்து கருண் நாயர் தற்போது புதிய உலக சாதனைப் படைத்து இருக்கிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.








