உலக கேரம் சாம்பியன் காசிமா!
ரூ.1 கோடி அளித்து தமிழ்நாடு அரசு கவுரவிப்பு

அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த சென்னை வீராங்கனை காசிமாவுக்கு, ரூ.1 கோடி ஊக்கத்தொகை அளித்து தமிழ்நாடு அரசு கவுரவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெகபூப் பாஷாவின் மகள் எம்.காசிமா, தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் கடந்த நவம்பர் 11 முதல் 17ம் தேதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 6வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இதில் தனிநபர், இரட்டையர் மற்றும் குழு பிரிவுகளில் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதித்தார் எம். காசிமா.

இந்நிலையில் துணை முதல்வரும், மாநில விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சர்வதேச கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் 3 தங்கப்பதக்கம் வென்று தமிழ் நாட்டின் பெருமையை பறைசாற்றிய எம்.காசிமாவை நேரில் அழைத்து, ரூ.1 கோடி சிறப்பு ஊக்கத்தொகைக்கான காசோலையை அளித்து வாழ்த்தினார்.

இதேபோல் இரட்டையர் மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கப்பதக்கம் வென்ற வி.மித்ராவுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சமும், குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற கே.நாகஜோதிக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சமும் வழங்கி பாராட்டினார்.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







