கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா
2ஆவது புதிய பந்தில் மாயாஜாலம்

பிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட்-டும் சதமடித்து, 4ஆவது விக்கெட்டுக்கு 241 ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 316 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிந்தது.
2ஆவது புதிய பந்தில் திருப்புமுனை
அப்போது இந்திய அணி இரண்டாவது புதிய பந்தை எடுத்தது. இங்குதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. புதிய பந்தை ஜஸ்பிரித் பும்ரா கையாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். அவரது மாயாஜால பந்துவீச்சு இந்திய அணி மீண்டுவர கைகொடுத்தது.
பும்ரா தனது முழுமையான திறனை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு சவாலாக இருந்த ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரையும் வெளியேற்றினார். இவர்களையும் சேர்த்து பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பது இது 12ஆவது முறையாகும்.

கபிலின் சாதனையை முறியடித்த பும்ரா
அதேவேளையில், SENA என்றழைக்கப்படும் South Africa, England, New Zealand and Australia நாடுகளில், பும்ரா ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்திருப்பது இது 8ஆவது முறையாகும். SENA நாடுகளில் இந்த சாதனையை படைத்திருக்கும் முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமை பும்ராவுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்தார்.
முன்னதாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில், டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் 7 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.
3ஆவது டெஸ்ட் நடைபெற்றுவரும் பிரிஸ்பேனில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவுக்கு போட்டியை வெல்லும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது.







