லண்டனில் முதல் சிம்பொனி நேரலை
இசைஞானி இளையராஜா அறிவிப்பு

வரும் மார்ச் 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் தமது முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில், 1943-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி ஞானதேசிகன் என்ற இயற்பெயருடன் பிறந்த இளையராஜா, காலமெல்லாம் மயக்கும் இசையை மீண்டு, அதன் ராகத்தை காற்றில் பரப்பி, செவிட்டாத கானத்தை செவிகளுக்கு அளித்து கொண்டிருக்கிறார். ராசய்யா என்ற செல்லப் பெயருடன் உலாவும் அவர், கடந்த 1976-ம் ஆண்டு “அன்னக்கிளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

அன்று தொடங்கிய மேஸ்ட்ரோவின் இசைப் பயணம், உலக இசை வானில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நேரத்தை நெருங்கி வருகிறது. இந்த அரை நூற்றாண்டில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசைஞானி இசையமைத்துள்ளார். அவற்றில் 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தமது இன்னிசையால் உயிரூட்டியுள்ளார். மேலும் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை சொந்தமாகவே எழுதியுள்ள இசைவேந்தன், 100-க்கும் மேற்பட்ட பாடல்களையும் சொந்தக் குரலில் பாடி கேட்போரை மயக்குகிறார்.

இந்நிலையில் இளையராஜா மலையாளத்தில் பேசி ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘’அன்புக்குரிய கேரள மக்களே… சொந்தங்களே… வணக்கம்! இந்த செய்தி என் அண்ணன் ஜே.சி.க்கானது. அவருக்கு கொச்சியில் பாராட்டு விழா நடந்த போது, சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவோடு ஒரு சிம்பொனி செய்து வெளியிட வேண்டும் என என்னிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று சிம்பொனிக்காக முழுமையாக எழுதி, சிம்பொனியை முழுமையாக ரெக்கார்டு செய்து உள்ளேன். அதனை ஜே.சி. அண்ணனுக்கு பெரிய சந்தோஷத்தோடு தெரிவிக்கிறேன்! அண்ணா… நீங்கள் சொன்ன வேலையானது, கடவுளின் அனுகிரகத்தோடு சரியாக வந்துள்ளது. ரொம்ப சந்தோஷம்! அண்ணனுக்கு சொன்னதை நான் நிறைவேற்றி விட்டேன்! என அந்த காணொலியில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் இசைஞானி.

முன்னதாக கடந்த மே மாதம் இளையராஜா வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில், சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் தமது சிம்பொனி இசையை வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியிடப் போவதாகவும் இசைஞானி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமது முதல் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி குறித்த அறிவிப்பையும், தமது எக்ஸ் தளப் பதிவில் இளையராஜா தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதில் “2025ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் தமது முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் டிக்கெட் விற்பனை குறித்த தகவலையும் அதில் பகிர்ந்துள்ளார் இசைஞானி.








