“ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை”
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடிதம்

டெல்லி, பிப்.04; எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாரதிய ஜனதா உறுப்பினர் நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நேற்று (பிப்.03) பேசிய ராகுல் காந்தி, சீனர்கள் இந்திய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதாகக் கூறினார். ஆனால், ராகுலின் குற்றச்சாட்டை பிரதமர் நரேந்திர மோடி மறுத்தார்.
சீன துருப்புகள் இந்திய எல்லைக்குள் இருப்பதாக பேச்சு

சீன துருப்புகள் “நமது எல்லைக்குள்” இருப்பதாக ராணுவத் தளபதி கூறியதாகவும் ராகுல் மேலும் தெரிவித்தார்.
“சீனப் படைகள் நமது எல்லைக்குள் இருப்பதைப் பிரதமர் மறுத்துள்ளார்; ஆனால் சில காரணங்களால், இந்திய எல்லைக்குள் சீனர்கள் நுழைவதைப் பற்றி நமது ராணுவம் தொடர்ந்து பேசி வருகிறது” என்றும் ராகுல் காந்தி கூறியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
ராகுல் கூறுவது பொய்யான குற்றச்சாட்டுகள்; ராஜ்நாத் சிங்

ராகுலின் பேச்சுக்கு இன்று மக்களவையில் பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா-சீனா எல்லையில் உள்ள நிலைமை குறித்து ராணுவ தளபதியின் அறிக்கை பற்றி ராகுல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, பாரதிய ஜனதா எம்பி நிஷிகாந்த் துபே, ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக்கோரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராகுல் மீது நிஷிகாந்த் துபே கடுமையான குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் வெட்கமின்றி வரலாற்று மற்றும் ஆதாரபூர்வமான உண்மைகளை திரித்து கூறியது மட்டுமின்றி, நமது நாட்டை கேலி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டதாக நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.







