மதுபானக்கடை நடத்த அரசுக்கு எள்ளளவும் விருப்பமில்லை: அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் மதுபானக் கடைகளை நடத்த அரசுக்கு எள்ளளவும் விருப்பமில்லை என தமிழ்நாடு மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ஈரோடு பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை தொடக்கி வைத்த பின் தமிழ்நாடு வீட்டுவசதி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, டாஸ்மாக் கடைகளை நடத்த அரசுக்கு எள்ளளவும் விருப்பமில்லை என்றும், திடீரென டாஸ்மாக் கடைகளை மூடினால் ஏற்படும் விளைவுகள் குறித்து அனைவருக்கும் தெரியும் என்றும், மிக கடுமையான சூழ்நிலையில், நிதானமாக செயல்பட்டு, கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் என்றும் கூறினார்.

மக்களை மதுப்பழக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர் சு.முத்துசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொள்கை ரீதியான முடிவுக்காக மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாகவும், அவர்களின் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல மாநாடு நடத்துவதாகவும் தெரிவித்தார். அதிமுகவை, விசிக மாநாட்டுக்கு அழைத்தது குறித்து பதிலளித்த அவர், பொதுவாகத்தான் மாநாட்டிற்கு அழைத்துள்ளார்கள் என்றும், கல்யாண அழைப்பு எதிரிக்கும் கூட விடுப்பார்கள் என்பதால் இது தப்பில்லை என்றும் கூறினார். ஒரு அழைப்பிற்காக அதிமுகவினர் ஆட்டம் போடுவதாகவும் முத்துசாமி விமர்சித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது மதுவிலக்கு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்ததால் கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பெண்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்வதாகக் கூறிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை 33 கோடி தடவை மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.






