எனக்கு அதிகாரம் இருந்தால் இந்தியாவுக்கு தடை
ரஷீத் லத்தீப் கொந்தளிப்பு

இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையைவிட, இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் விவகாரம் தீர்க்கப்படாமல் இழுபறியாகவே உள்ளது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மறுத்துவிட்டது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரே பாகிஸ்தானில் நடைபெறாது என்று கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியுள்ளது.
பாகிஸ்தானுக்கு வர முடியாது என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்று, அந்தக் கடிதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப், “எனக்கு அதிகாரம் இருந்தால் பாகிஸ்தானை எந்தப் போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக விளையாட விட மாட்டேன்” என்று கூறியுள்ளார். ஐ.சி.சி தங்கள் பிரச்னைகளை தீர்க்கும் வரை இருநாடுகளுக்கும் இடையே உலகளாவிய போட்டியை நடத்தும் உரிமையை வழங்கக்கூடாது என்றும் லத்தீப் கேட்டுக் கொண்டார்.
“எனக்கு அதிகாரம் இருந்திருந்தால், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுவதை நிறுத்தியிருப்பேன்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார், ரஷீத் லத்தீப். “இதற்காக நான் யாரையும் குறை கூற மாட்டேன், நீங்கள் (இந்தியா) பாகிஸ்தானில் விளையாட விரும்பவில்லை என்றால், எங்களுக்கு எதிராக விளையாடவே வேண்டாம்” என்றும் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.
“நான் ஐ.சி.சி.யில் இருந்திருந்தால், இந்த முடிவை எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக போராடியிருப்பேன்” என்று எளிமையான பேச்சுக்கு பெயர் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் குறிப்பிட்டிருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







