அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ்- விராட் கோலி மோதல்
கான்ஸ்டாஸை 'செட்டில்' ஆக விடாமல் தடுக்க முயற்சி?

மெல்போர்ன், டிச.26 ; மெல்போர்னில் தொடங்கியுள்ள 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டின் போது, ஆஸ்திரேலிய அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ்-க்கும் இந்திய வீரர் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட், மெல்போர்னில் இன்று காலை தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார்.
அறிமுக போட்டியிலேயே அச்சமின்றி ஆட்டம்

19 வயதே நிரம்பிய அவர், தனது அசாத்தியமான ஆட்ட நுணுக்கத்தால் இந்தியாவை அதிர வைத்தார். உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை சாம் கான்ஸ்டாஸ் எதிர்கொண்ட விதம் வியப்பை ஏற்படுத்தியது. பும்ராவின் ஒரு பந்தை கான்ஸ்டாஸ் (reverse-ramping) ரிவர்ஸ்-ராம்ப் முறையில் திருப்பி பவுண்டரி அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஆடுகளத்தில் கான்ஸ்டாஸ்- கோலி மோதல்

பத்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்த பிறகு கான்ஸ்டாஸ் தனது கையுறைகளை கழற்றிவிட்டு, மறுமுனையில் உள்ள சக வீரரான உஸ்மான் கவாஜாவை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்போது பந்தை எடுத்துக்கொண்டு எதிர் திசையில் வந்த விராட் கோலி, கான்ஸ்டாஸ் திசையில் வேண்டுமென்றே நகர்ந்து, அவர் மீது மோதினார்.
அப்போது கோலி திரும்பி ஏதோ சொல்ல, கான்ஸ்டாஸூம் பதிலுக்குப் பேசினார். இதன் காரணமாக பதற்றம் ஏற்பட்டதால் உஸ்மான் கவாஜாவும், நடுவரும் குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.
“கோலியின் செயலை நடுவர்கள் பாத்திருப்பார்கள்”

அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாக ஆடும் சாம் கான்ஸ்டாஸ் settle ஆகிவிடக்கூடாது என்ற நோக்கில் கோலி இவ்வாறு நடந்துகொண்டாரா என சந்தேகம் எழுந்துள்ளது. முதல் போட்டி என்ற பதற்றமின்றி நேர்த்தியாக ஆடிய சாம் கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலியின் செயலை போட்டி நடுவர்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மைக்கேல் வாகனும், ரிக்கி பாண்டிங்கும் தெரிவித்துள்ளனர். விராட் கோலி முழு ஆடுகளத்தையும் தனது வலதுபுறத்தில் நடந்து அந்த மோதலைத் தூண்டியதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.







