நடுவானில் விமானம்- ஹெலிகாப்டர் மோதிய விபத்து
பயணித்த 67 பேரும் உயிரிழந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு

ஆர்லிங்டன், ஜன.31; அமெரிக்காவில், ராணுவ ஹெலிகாப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில், அவற்றில் பயணம் செய்த 67 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஒன்று வாஷிங்டனில் உள்ள (Potomac) போட்டோமேக் ஆற்றின் குறுக்கே ரொனால்ட் ரீகன் தேசிய விமானநிலையத்தில் தரையிறங்கும்போது அதன் பாதையில் குறுக்கே வந்த ராணுவ ஹெலிகாப்டர், விமானத்தின் மீது பயங்கரமாக மோதியது.
நடுவானில் பயங்கர விபத்து; 67 பேர் பலி

அப்போது அந்த விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் ராணுவத்தினர் மூன்று பேர் இருந்தார்கள்.
இந்த பயங்கர விபத்தில் ஜெட்லைனர் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்த 67 பேரும் உயிரிழந்துவிட்டதாக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் போட்டோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கால் நூற்றாண்டில் மிக மோசமான விபத்து

அமெரிக்காவில், ஏறக்குறைய கால் நூற்றாண்டில் நடுவானில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
விமானத்தின் பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.







