சென்னையில் தொடர் மழையால் மிதக்கும் சாலைகள்
தத்தளிக்கும் வாகனங்கள்; இயல்புநிலை பாதிப்பு

சென்னையில் தொடர்மழை காரணமாக, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல சாலைகள் மழைநீரில் மிதப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மெல்ல நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கிண்டி, அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், வேளச்சேரி, தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்பட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது.
மழையில் மூழ்கிய சாலைகள்
அண்ணா சாலை, கோயம்பேடு சாலை, ஜிஎஸ்டி சாலை, ராஜீவ் காந்தி சாலை என பல முக்கிய சாலைகள் மழைநீரில் மிதக்கின்றன. இதனால் இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதை மழையால் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர் மழை எதிரொலியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இதனிடையே, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.






