வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மோசமடைகிறதா?
முன்னுக்கு பின் முரணான தகவல்: ரசிகர்கள் குழப்பம்

மும்பை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சகவீரரான காம்ப்ளியின் உடல்நலப் பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக பலவாறாக எழுதப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற சூழலில், தனக்கும், டெண்டுல்கருக்கும் பயிற்சியளித்த மறைந்த ரமாகாந்த் அச்ரேக்கரை கௌரவிக்கும் விதமாக மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காம்ப்ளி கலந்து கொண்டனர். அப்போது அவர் சரியாக நடக்கக்கூட முடியாமல் சிரமப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் அவரது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், தானேவில் உள்ள அக்ரிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீர் தொற்றுடன் போராடும் காம்ப்ளி

சிறுநீர் தொற்றுடன் போராடி வருவதாகத் தெரிவித்திருந்த வினோத் காம்ப்ளி, தனது மனைவியும் குழந்தைகளும் ஒரு பாறையைப் போல் நின்று தன்னை கவனித்துக் கொள்வதாக கூறியிருந்தார்.
இதுபோன்ற சூழலில், மருத்துவமனையில் வினோத் காம்ப்ளியை சந்தித்தது தொடர்பான வீடியோ காட்சியை ரசிகர் ஒருவர் வெளியிட்டார். அதில் காம்ப்ளி கட்டைவிரலை உயர்த்தி காண்பித்து நல்ல நிலையில் இருப்பதைப் போன்று சைகை காட்டிய காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, அக்ரிதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், காம்ப்ளியின் உடல்நிலை சீராக உள்ளபோதிலும், கவலைக்கிடமளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.







