பாரதியாருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை
திமுக அரசு மீது தமிழிசை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக, மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மகாகவி பாரதியாரின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பாரதியாரின் புகழைப் பாடுவதில் பாஜக பெருமை கொள்வதாக குறிப்பிட்டார். ஏனென்றால், பாரதியார் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் என்று அவர் கூறினார்.
ஆனால் தமிழ்நாட்டில் துரதிர்ஷ்டவசமாக பாரதி, தமிழக அரசால் அந்த அளவிற்கு கொண்டாடப்படுவது இல்லை என்று தமிழிசை அதிருப்தி தெரிவித்தார். பெண் விடுதலைக்காக பெரியாருக்கு அங்கீகாரம் கொடுக்கும் இந்த அரசு பாரதியாருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுப்பது இல்லை என அவர் சாடினார்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு எதிரான அரசாக உள்ளது எனக் குற்றஞ்சாட்டிய தமிழிசை சௌந்தரராஜன், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கண்டனம் தெரிவித்தார்.
அதானியை தான் சந்திக்கவில்லை என்று தான் முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் தனது குடும்பத்தினர் யாரும் அவரை சந்திக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல வேண்டும் என்று, தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.







