பெண் பத்திரிகையாளரை மிரட்டினாரா விராட் கோலி?
ஆஸ்திரேலிய ஊடகம் கடுமையான விமர்சனம்

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பெண் பத்திரிகையாளரை மிரட்டியதாக ஆஸ்திரேலிய தொலைக்காட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா மற்றும் குழந்தைகளுடன் கடந்த வியாழக்கிழமையன்று மெல்போர்ன் நகருக்குச் சென்றார்.
குடும்பத்தினரை படம்பிடித்ததால் அதிருப்தி

அங்கு விமானநிலையத்தில் விராட் கோலி ஒரு வினோதமான பிரச்னையை எதிர்கொண்டார். பெண் பத்திரிகையாளர் ஒருவர் விராட் கோலியையும் அவரது குடும்பத்தினரையும் வீடியோவில் படம் பிடித்தார். இதனைப் பார்த்த கோலி, அந்த வீடியோக்களை நீக்குமாறும், தன்னை தனியாக படம் பிடித்துக் கொள்ளும்படியும் பெண் பத்திரிகையாளரை கேட்டுக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் பிரபலங்களை எந்தத் தடையுமின்றி படம்பிடிக்கவும் புகைப்படம் எடுக்கவும் அனுமதி உண்டு. அதனடிப்படையிலேயே அந்தப் பெண் கோலி மற்றும் அவரது குடும்பத்தினரை வீடியோ எடுத்துள்ளார்.
இது ஒரு பிரச்னையாகாத நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘9 ஸ்போர்ட்ஸ்’ என்ற தொலைக்காட்சி ஊடகம், விராட் கோலியும் அவரது குடும்பத்தினரும் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வை விவாதப் பொருளாக்கி உள்ளது.
கோலி மீது ஆஸி.,ஊடகம் கடும் விமர்சனம்

அந்த தொலைக்காட்சியின் செய்தியாளர் டோனி ஜோன்ஸ் என்பவர் , விராட் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார். விராட் கோலி பெண் பத்திரிகையாளரை மிரட்டியதாக ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார். மேலும் விமானநிலையத்தில் கோலியின் நடவடிக்கைகள் பொருத்தமற்றவை என்றும், அவர் ஒரு அடாவடி நபர் எனவும் ஜோன்ஸ் வசைபாடினார்.
விமானநிலையத்திற்கு வருபவர் அரசியல்வாதியாக இருந்தாலும், விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் அவர்களைப் படம்பிடிப்பது தங்களது கடமை என்பதால், பத்திரிகையாளர் வீடியோ எடுத்ததாக டோனி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ‘9 ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சி விராட் கோலியை விமர்சித்திருப்பதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். இந்தப் பிரச்னை தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.







