பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா… இத படிங்க!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான பொங்கல் உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும். பழையனவற்றையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தீயிட்டு கொளுத்தும், போகிப் பண்டிகையில் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அந்த நான்கு நாள்களும் கொண்டாட்டம் களைகட்டும்.
வேளாண் பெருமக்களின் கொண்டாட்டமான பண்டிகையான பொங்கலை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்த பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்காக சுமார் ஆறு லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செல்கின்றனர். இதில் பெரும்பாலானோருக்கு விருப்பமான பயணத் தேர்வாக இருப்பது ரயில்களே. பயணக் கட்டணம் குறைவு என்பதாலும், அதிக அலைச்சலின்றி போக முடிவதாலும், பெரும்பாலானோர் ரயிலில் ரிசர்வேஷன் செய்து பயணம் செய்வார்கள்.

பயணிகளின் வசதிக்காகவும் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு சுமார் 4 மாதங்களுக்கு, அதாவது 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும் வகையில் ரயில்வேதுறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் (செப்டம்பர்) 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புபவர்கள், செப்டம்பர் 12ஆம் தேதியும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 13ஆம் தேதியிலும், ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதியிலும், ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 15 ஆம் தேதியிலும், ஜனவரி 14ஆம் தேதி பயணம் செய்ய விரும்புகிறவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதியிலும் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து பயணம் செய்யலாம். IRCTC இணையதளம் வாயிலாகவும், ரயில் ரிசர்வேஷன் மையங்கள் வாயிலாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






