உலக பிளிட்ஸ் செஸ் தொடரில் அசத்தல்
தமிழ்நாட்டின் வைஷாலி வெண்கலம் வென்றார்

உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில், தமிழ்நாட்டின் வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். உலக செஸ் பிளிட்ஸ் ஓபன் பிரிவில் மேக்னஸ் கார்ல்சன் – இயான் நெபோம்னியாட்சி கூட்டு சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் மகளிர் காலிறுதியில் சீன வீராங்கனை ஸு ஜினெருடன் மோதிய வைஷாலி, 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனை ஜு வென்ஜுனுடன வைஷாலி பலப்பரீட்சை நடத்தினார். இதில் 0.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியை தழுவியதால் வைஷாலிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இதனிடையே உலக செஸ் பிளிட்ஸ் தொடரில் சீன வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தினர். அரையிறுதியில் வைஷாலியை வென்ற ஜு வென்ஜுன், இறுதிப் போட்டியில் சக நாட்டு வீராங்கனையான லெ-டிங்ஜீயுடன் மோதினார். பரபரப்பான போட்டியில் 3.5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று வென்ஜுன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் உலக செஸ் பிளிட்ஸ் ஓபன் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில், உலக நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் – ரஷ்யா வீரர் இயான் நெபோம்னியாட்சி மோதினர். 3 ஆட்டங்கள் ஆடியும் வெற்றியாளரை தீர்மானிக்க முடியாததால் இருவரும் சாம்பியன்ஷிப்பை பகிர்ந்து கொள்வதென முடிவெடுத்தனர். அதற்கு உலக செஸ் நிர்வாக அமைப்பான ஃபிடே ஒப்புக் கொண்டதால் இருவரும் கூட்டு சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டனர். செஸ் பிளிட்ஸ் வரலாற்றில் முதல் முறையாக இருவர் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








