சிட்னி பிங்க் டெஸ்ட் நாளை தொடக்கம்…

கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் இந்தியா!

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தேர்வாக வேண்டுமெனில், பிங்க் சிட்னி போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் நாளை களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்று உள்ளது. பெர்த் முதல் போட்டியில் மட்டும் இந்தியா வென்றது. பின்னர் பிரிஸ்பேன் டெஸ்ட் ‘டிரா’ ஆக, அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் அடுத்தடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, நடப்புத் தொடரில் 1-2 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

இதற்காக கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், கோஹ்லி, ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ஆகியோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் கடின பவுலிங் பயிற்சி செய்தனர்.

இந்திய அணியின் தொடர் தோல்விகளால் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்த தொடரோடு ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அப்படி இல்லையேனில் இருவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் ரசிகர்களில் ஒருதரப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் இருவரும் தங்களின் திறமையை நிரூபித்துகாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “பிங்க் டெஸ்ட்” என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை பிரதிபலிக்கும் வகையில் பிங்க் நிற தொப்பி அணிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே சிட்னி டெஸ்டில் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார். அவ்வணி வீரர்களும் நேற்று தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிட்னி பிங்க் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதில் வெற்றி பெற்று தொடரை இந்தியா சமன் செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே நடப்புத் தொடரை சமன் செய்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்திய அணியால் தக்க வைக்க முடியும். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வாய்ப்பிலும் நீடிக்க முடியும்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x