மனக்காயங்களை ஆற்றிக்கொள்ள…
ஒரு எரும மாடும்… பின்னே ஞானும்!
ஒரு தோழிகிட்ட “Your wound is probably not your fault, but your healing is your responsibility”ன்னு பேசிட்டு இருந்தேன். ஆனா, அந்த தோழி கன்வின்சே ஆகாம, திரும்பத் திரும்ப “அவ எப்படி அப்படி செய்யலாம்”ன்னு சொல்லிட்டே இருந்தா. அப்போ தோழிக்கு ஒரு கதையை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்லலாம்னு நினைக்கறேன்…
ரெண்டு மாசம் முன்னாடி ஒரு நாளைக்கு நான் பாட்டுக்க சிவனேனு வண்டியில போயிட்டு இருந்தேன். ரோட்டோரத்துல எருமை மாடுகளோட ‘டீம் மீட்டிங்’ நடந்துட்டு இருந்துச்சு. ஏதோ முக்கியமா பேசிட்டு இருக்காங்களே, நாம ஏன் டிஸ்டர்ப் பண்ணுவானேன்னு, நான் கொஞ்சம் ஒதுங்கி நடுரோட்டுக்கா வண்டிய விட்டேன்.
அந்த நேரம் பார்த்து மீட்டிங்குல ஏதோ கைகலப்பு ஆகவே, ஒரு எரும மாடு மட்டும் மீட்டிங்கவிட்டு கோவமா வெளிநடப்பு செஞ்சிடுச்சு. கண்ணு மண்ணுத் தெரியாம கோவமா, வேகமா ஓடிவந்த அந்த எரும மாடு, வண்டியில போயிட்டு இருந்த என்னை ஒரு இடி இடிச்சுது பாருங்க.. நான் வண்டியோட சேர்ந்து பொதுகடீர்னு கீழே விழுந்துட்டேங்க. (இந்த இடத்துல எனக்காக நீங்க கண்ணுல ஜலம் வச்சுகணும்.. ஓகே?) அப்போ, ரோட்டுல போற மனுஷங்க வந்து நான் எந்திரிக்க உதவி செஞ்சாங்க.
நானும் எந்திருச்சு, வண்டிய ஓட்டிகிட்டு, நேரா பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போனேன். போனேனா? அங்க போயிட்டு, இந்த மாதிரி வண்டியில வரப்போ.. மாடு தள்ளி விட்டுருச்சு.. கையில ரொம்ப அடிபட்டு இரத்தம் கொட்டுது (கால் முட்டி கிட்டயும் காயம் தான், ஆனா அது அவ்வளவு ஆழமா இல்ல), first aid பண்ணுங்கன்னு சொன்னேன். அவங்களும் காயத்தை க்ளீன் பண்ணி பார்த்துட்டு, காயம் கொஞ்சம் ஆழமா இருக்குறதால, x-ray எல்லாம் எடுத்துப்பார்த்துட்டு, தையல் போடணும் போல இருக்கு.. சர்ஜன் வரணும்.. வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க.
வெயிட்டினேன்.
சர்ஜனும் வந்தாரு. காயத்த எக்சாமின் செஞ்சிட்டு, அவரு “காயம் கொஞ்சம் ஆழமாத்தான் இருக்கு மா. நியாயமா இதுக்கு நான் தையல்தான் போடணும். ஆனா, அந்த காயத்தோட நேச்சர்.. காயத்த சுத்தி இருக்கிற தசை ஸ்ட்ராங்கா இல்ல.. தையல் போட்டாலும் பிஞ்சுக்கும்.. அதனால, காயத்தை அப்படியே ஓபன்ல வச்சு, தினமும் க்ளீன் பண்ணி, மருந்து தடவிட்டு வாங்க.. காயத்துல மண்ணு கிண்ணு போகாம பார்த்துக்கோங்க.. ஆன்டிபயாடிக்ஸ், ஆன்டிசெப்டிக் மருந்தெல்லாம் எழுதி தரேன்.. ஃபாலோ பண்ணுங்க.. சரியாகும்.. இன் தி மீன் டைம், காயம் ஆரலைனா, இல்ல வலி குறையலைனா திரும்பி வாங்க”ன்னு சொன்னாரு.
சரின்னு சொல்லிட்டு மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிட்டு வந்து, அவரு சொன்ன மாதிரி ஃபாலோ செஞ்சு.. இப்போ காயம் நன்றாக ஆறி, மூடிவிட்டது. இன்னும் அந்த இடத்துல கொஞ்சம் வலி இருக்கு, காயத்தோட தழும்பு இருக்கு.. ஆனா.. காயம் நன்றாக ஆறியிருப்பதும், பெரிதாக வலியில்லை என்பதுமே உண்மை.

இந்த கதையை சொல்லிட்டு தோழியிடம், “இதுலேந்து இன்னா புரியுது உனக்கு?”ன்னு கேட்டேன். “ஏதோ சொல்ல வர.. ஆனா என்னான்னு தான் தெரியல.. நீயே சொல்லிடு”ன்னு சொன்னா. சரி.. சொல்லுறேன்.. “நோட்ஸ் எடுத்துக்கோ.. அப்படியே கையிலே ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ!”ன்னு சொன்னேன்.
நான்:
1. இப்போ.. இந்த கதையில நான் தான் நீ, அந்த எரும மாடு தான் உன்ன காயப்படுத்தினவங்க. இங்க காயம்ங்கிறது என் கையில பட்ட காயம் இல்ல.. உன் மனசுல ஏற்பட்ட காயம்.
2. நீ என்ன செய்யிறேனா, பொழுதுக்கும் “எரும மாடு எப்படி இப்படி செய்யலாம்.. என்ன தான் இருந்தாலும், எரும மாடு இப்படி செஞ்சிருக்கக் கூடாது”ன்னு புலம்பிட்டே, புகைஞ்சிட்டே இருக்கிறதும் இல்லாம, எரும மாடு உன்ன காயப்படுத்தினதால, எரும மாடே வந்து உன் காயத்துக்கு மருந்து போடணும்னு எதிர்பார்க்குற. இது நியாயமா.. இல்ல நடக்குமா சொல்லு!
3. அடுத்து, உன்ன காயப்படுத்தினதுக்கூட அந்த எரும மாடுக்குப் புரிஞ்சிருக்காது.. அதுக்கு புரியிற வரைக்கும், நீ வெய்ட் செய்யணும்னு நினைச்சா, வெயிட் செஞ்சா உன்னுடைய காயம்தான் ஆராமலேயே இருக்கும்.
4. தவிற, நம்ம காயத்த ஆத்திக்க வேண்டியது நம்ம பொறுப்பு மட்டுமில்ல, நம்ம கடமையும்கூடத்தான்.
5. நியாபகம் இருக்கா.. எப்படி என்னோட டாக்டரால என்னோட காயத்துக்கு தையல் போட முடியலையோ, அதே மாதிரி மனநல மருந்துவராலயோ, நண்பர்களாலயோ, உறவுகளாலயோ 100% நம்ம மனசுல ஏற்பட்ட காயத்த குணப்படுத்த முடியாது. ஆனா, அவங்களோட ஆலோசனையோட, உதவியோட, வழிகாட்டுதலோட நாம தான் தினமும் காயத்தை க்ளீன் செஞ்சு, மருந்து தடவி, காயத்துக்குல ஏதும் குப்பை சேராம பார்த்துக்கிட்டு, மருந்திடும் நேரம் தவிர்த்து மத்த நேரத்துல காயத்தை சொறிஞ்சிட்டே இருக்காம இருந்து, காயம் ஆறவதற்கு நேரம் கொடுத்து.. நாம பார்த்துகிட்டாதான் காயம் ஆறும். இதுல நம்ம effort தான் ஜாஸ்தி.. புரியுதா உனக்கு?
6. தவிற, வாழ்க்கையில நாம.. இந்த மாதிரி பல எரும மாடுகள சந்திக்க வேண்டி வரும்.. இப்படி ஒவ்வொரு எருமைக்கும் ஒக்காந்து ஒப்பாரி வச்சிட்டே இருந்தா, வேலைக்கு ஆகுமா சொல்லு!
7. சில சமயத்துல மத்தவங்களுக்கு நாமளும், நம்மள அறியாமலேயே, அவங்களுக்கு எருமை மாடா இருக்கோம்ங்கிறதுதான் நிதர்சனம். ஆனா, முடிஞ்ச வரைக்கும் நாம எரும மாடா இல்லாம மனுஷங்களா இருக்க முயற்சிக்கணும். அதுக்கு மொதல்ல, அந்த எருமைக்கு புரிஞ்சிருந்தா இந்த எருமையை இடிச்சிருக்குமான்னு யோசிக்கணும். புரிஞ்சுதா எரும?
அவ: நல்லா புரிஞ்சுது எரும..
நான்: இன்னா புரிஞ்சுது?
அவ: இனிமே எந்த எருமகிட்ட அடிபட்டாலும்.. எரும.. உன்கிட்ட வந்து சொல்லக்கூடாதுன்னு புரிஞ்சுது..
நான்: எரும! எரும! புடிச்சு உள்ளப் போடுங்க சார் இவள! நான் என்ன சொன்னா, இவ என்ன புரிஞ்சுக்குறா பாருங்க.. சார்..
உங்களுக்காவது நான் சொன்ன எரும கதை புரிஞ்சுதா, மக்களே? 
Fun apart.. நியாபகம் வச்சுக்கோங்க..
“நமக்கு நேர்ந்த காயங்களுக்கு வேண்டுமானால் நாம் காரணமாக இல்லாமல் போகலாம்.. ஆனால், நமது காயங்களை ஆற்றிக்கொள்வது நமது பொறுப்பு மற்றும் கடமையாகும்!”
வாழ்தல் இனிது! சிறகடித்து வாழ்வோம்..
– ஷோபிதா கிருஷ்ணமூர்த்தி



