டி வில்லியர்சின் சாதனையை சமன் செய்தார், மேத்யூ போர்டு 

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ருத்ரதாண்டவம்

டப்ளின்,மே.24; சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகளின் (Matthew Forde) மேத்யூ ஃபோர்டு தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது.

மே.இ.தீவுகள் அணி 352 ரன்கள் குவிப்பு

முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, அசுரத்தனமாக விளையாடி 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.

இதில் மத்திய கள ஆட்டக்காரரான (Keacy Carty) கீஸி கார்ட்டி அற்புதமாக விளையாடி ஒரு நாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

அயர்லாந்து அணியை திகைக்க வைத்த கீஸி கார்ட்டி

தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடிய அவர், பிற்பாதியில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார். பிறகு வந்த ஷாய் ஹோப் 49 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கை உயர உதவினார்.

இந்த ஆட்டத்தில் எட்டாவது வீரராக களமிறங்கிய (Matthew Forde)மேத்யூ ஃபோர்டு அயர்லாந்து பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தார்.

மேத்யூ ஃபோர்டு 16 பந்துகளில் அரை சதம் விளாசல்

பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சர்வசாதாரணமாக பறக்கவிட்டு வாணவேடிக்கை நிகழ்த்திய ஃபோர்டு, 16 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

இதன் மூலம், 2015-ல் இதே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 16 பந்துகளில் அரைசதமடித்து படைத்திருந்த சாதனையை (Matthew Forde)மேத்யூ ஃபோர்டு சமன் செய்தார்.

மழையால் ஆட்டம் ரத்தானதால் மே.இ.தீவுகள் ஏமாற்றம்

அயர்லாந்து பந்துவீச்சாளர்களை மிரளவைத்த மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை குவித்தது.

அயர்லாந்து அணியின் இன்னிங்ஸ் தொடங்குவதற்குள் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

தொடரில் அயர்லாந்து அணி முன்னிலை

மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் அயர்லாந்திடம் 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர், அதற்கு பதிலடி கொடுக்க கிடைத்த வாய்ப்பு மழையால் பறிபோனதால் ஏமாற்றமடைந்தனர்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x