கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட்டில் சுப்மன் கில் சதம்
ஜெய்ஸ்வாலும் சதம் விளாசி சாதனை; இந்தியா ரன் குவிப்பு

லீட்ஸ், ஜூன்,21; இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோரின் அபார சதம் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, (Leeds) லீட்ஸில் உள்ள (Headingley) ஹெடிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது.
முதல் டெஸ்ட்டில் சாய் சுதர்சன் ‘கோல்டன் டக்’

யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட அவர்கள், முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர்.
ராகுல் 42 ரன்களில் வெளியேற, அறிமுக வீரரான சாய் சுதர்சன் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே விக்கெட்டை பறிகொடுத்தார்.
கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தல்

பிறகு விளையாட வந்த கேப்டன் சுப்மன் கில்லும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
அசத்தலாக விளையாடிய ஜெய்ஸ்வால் அபாரமாக சதமடித்து 101 ரன்களில் அவுட்டானார். இதன் மூலம் லீட்ஸ் மைதானத்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும், இங்கிலாந்தில் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெயரும் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்தும், சுப்மன் கில்லும் இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர்.
கேப்டனாக முதல் டெஸ்ட்டில் சதமடித்த 4ஆவது இந்தியர்

தன் பங்கிற்கு சிறப்பாக விளையாடிய சுப்மன் கில்லும் சதமடித்து வரலாறு படைத்தார். 25 வயதான அவருக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஆறாவது சதமாகும்.
இதுமட்டுமின்றி, விஜய் ஹசாரே (1951), சுனில் கவாஸ்கர் (1976) மற்றும் விராட் கோலி (2014) ஆகியோருக்குப் பின்னர், கேப்டனாக முதல் இன்னிங்சில் சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது.
முதல் இன்னிங்சில் 3/359 ரன்கள் குவித்த இந்திய அணி

பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் நேர்த்தியுடன் விளையாடி அரை சதமடித்தார்.
முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளது. சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி இளம் வீரர்களின் மூலம் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.







