விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையும் முடிவடைகிறது..!!
முடிவு தனிப்பட்டது என்பதால் பிசிசிஐ தலையிட மறுப்பு

மும்பை, மே.12; ரோகித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோன்று டெஸ்ட்டிலிருந்து விடைபெறுவதென விராட் கோலி எடுத்திருக்கும் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
ரோகித், விராட் கோலி ஆகியோரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பாக மும்பையில் கடந்த 7ஆம் தேதி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
ரோகித் ஓய்வு; அதே பாதையில் விராட் கோலியும் ..!!

கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கூட்டத்தில், ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வு அறிவிப்பு பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது ரோகித் சர்மா இனி இந்திய அணியின் டெஸ்ட் திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்று அவரிடம் கிரிக்கெட் வாரியத்தினர் தெளிவுபடுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
கோலியின் முடிவில் தலையிட கிரிக்கெட் வாரியம் மறுப்பு

அந்தக் கூட்டத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவது தொடர்பான நோக்கத்தை நட்சத்திர வீரர் விராட் கோலியும் வெளிப்படுத்தியதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
நீண்ட கால போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை கோலி கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாகவும், ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு வாரியம் அவரை வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்..!

டெஸ்ட் போட்டியிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறும் முடிவு அவரது தனிப்பட்ட முடிவென்பதால், அதில் தலையிட விரும்பவில்லை என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மூத்த வீரர்கள் இருவர் ஓய்வுபெறுவதால், இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.







