சென்னையில் இன்றோடு மழை விலகிக் கொள்கிறதா..?
தனியார் வானிலை ஆய்வாளரின் கணிப்பு என்ன?

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் இன்றுடன் (டிச.12) மழை விலகிக் கொள்ளும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் சென்னை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பொழிந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்திருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது. அதேசமயம், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் பதிவில், நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மழை மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால், சென்னையில் மழை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் மழை பெய்வது இன்று தான் கடைசியாக இருக்கும் என பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என ஜான் தெரிவித்துள்ளார்.







