தி கோட் – வெகுஜனத்தை விசில் போட வைக்கும்!

2008 ஆம் ஆண்டு கென்யாவில் கதை தொடங்குகிறது. முதல் காட்சியிலேயே ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் இளவயது விஜயகாந்த் ஈர்க்கிறார். 19 வயது பையனாக நடிப்பதற்காக இந்தப் படத்திற்காகவே உடம்பை அவ்வளவு குறைத்திருக்கும் விஜய் உண்மையிலேயே ஈர்க்கிறார். விஜய்யின் மனைவியாக வரும் நாயகி புன்னகை அரசி சினேகா போலவே இருக்கிறாரே யார் இவர்? என்று யோசித்தபடியே பார்த்தால் கடைசியில் அவர் சினேகாவேதான். சும்மா சொல்லக்கூடாது அப்போது பார்த்ததை விட இப்போது இன்னும் இளமையாக தோற்றமளிக்கிறார்.
Special anti-terrorism squad (SATS) இல் பணி புரியும் நான்கு நண்பர்கள் (விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, ‘அஞ்சாதே’ அஜ்மல் அமீர்) சேர்ந்து முதல் காட்சியில் – பயங்கரவாதிகள் கடத்திச் செல்லும் யுரேனியத்தை ஓடும் ரயிலிலிருந்து மீட்கின்றனர்.
அதனை அடுத்த ஆப்ரேஷனில் விஜய்க்கு ஒரு பேரிழப்பு ஏற்படுகிறது. அதனால் வேலையையும் விட்டு, மனைவியையும் பிரிந்து வாழும் நிலை உருவாகிறது. இன்ப அதிர்ச்சியாக ஒரு திருப்புமுனை ஏற்பட மீண்டும் மனைவி மகளோடு இணையும் விஜய்யை, 14 ஆண்டுகள் கழித்து வந்து பழிவாங்க வருகிறார் வில்லன். இறுதியில் யார் வென்றார்கள் என்பதே கதை. காதல், பாசம், குடும்பம், நட்பு, துரோகம் எல்லாவற்றோடும் சேர்ந்த வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், வெங்கட் பிரபு தனக்கே உரிய பாணியில் வியக்க வைக்கும் விதமாக முழுநீள எண்டர்டெயின்மெண்ட் விருந்து படைத்திருக்கிறார்.
SATS-இல் பணி செய்யும் நான்கு நண்பர்கள், அவர்களின் பாஸ் ஜெயராம், (வில்லனாக வரும்) இன்னொரு பாஸ் மைக் மோகன் இவர்கள் தவிர வைபவ், யோகி பாபு, முதலில் வரும் விஜயகாந்த், கடைசியில் வரும் சிவகார்த்திகேயன், தோனி என விரல் விட்டு எண்ணினால் 10 விரல்களும் போதாத அளவுக்கு நட்சத்திரப் பட்டாளம் நிறைந்திருக்கிறது. இந்தப் பக்கம் பார்த்தால் விஜய்க்கு மனைவியாக வரும் சினேகா, பிரசாந்த் மனைவியாக வரும் லைலா, அவர்களின் மகளும் மற்றொரு கதாநாயகியுமான மீனாட்சி சௌத்ரி இவர்களெல்லாம் போதாது என்று திரிஷா வேறு வந்து 19 வயது இளம் விஜய்-உடன் குத்தாட்டம் போடுகிறார். விஜய், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் மட்டுமின்றி பெரும்பாலும் எல்லா நடிகர்களுமே தத்தமது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். மன்சூர் அலிகான், பொன்னம்பலம் போல முகப்பை அஷ்ட கோணலாக்கி மிரட்டிய வில்லன்களுக்கு மாற்றாக வந்த பிரகாஷ் ராஜ் போலவே, மைக் மோகனும் கவனம் ஈர்க்கிறார்.
முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியிலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை என்றாலும், இடையில் வரும் இரண்டு பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லாததாலும், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் நெடுநேரம் நீடிப்பதாலும் இரண்டும் ‘எப்பதான் முடியுமோ?’ என்ற அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதேபோல், வயதான தோற்றத்தில் வரும் விஜய் மட்டுமின்றி இளம் வயது விஜய்யின் ஹேர் ஸ்டைலும் ரொம்பவே உறுத்துகிறது. மற்றபடி, மூன்று மணி நேரமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கட்டிப்போடும் அளவுக்கு, பரபரப்பான காட்சிகள், யூகிக்க முடியாத திருப்பங்கள் என்று இயக்குநர் வெங்கட் பிரபு விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்றிருப்பதிலேயே, அவரின் அபார உழைப்பு தெரிகிறது. அண்மைக்காலமாக வரும் மாஸ் ஹீரோஸ் திரைப்படங்கள் வெட்டு குத்து என கோரமான வன்முறைக் காட்சிகளைக் கொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை தவிர்க்கும் பொருட்டு கோரமான காட்சிகள் எதுவுமே இப்படத்தில் இடம்பெறவில்லை. சண்டைக்காட்சிகளில்கூட டொப்பு டொப்பு என துப்பாக்கியால் மட்டுமே சுட வைத்திருக்கிறார்.
“மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது மிகப்பெரிய பொறுப்பு, முதலில் அவர்களுக்கான ரசிகர் பட்டாளத்தை திருப்தி படுத்த வேண்டும், ஒவ்வொரு வசனத்தையும்கூட பார்த்துப் பார்த்து எழுத வேண்டும் ஏனென்றால் ஒரு வசனத்தை மற்ற நடிகர்கள் சொன்னால் சாதாரணமாக கடந்துவிடுவார்கள், அதையே மாஸ் ஹீரோ சொல்லும்போது அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கும் ஆபத்து இருக்கிறது. அதனால் அது மிகப்பெரிய பொறுப்பு” என்று இயக்குநர் ராதா மோகன் அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரின் முந்தைய படங்கள் கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்த நிலையில், இதுதான் அவரின் கடைசி படத்துக்கு முந்தைய படம் என்று அறிவித்திருக்கும் நிலையில், அந்தப் பொறுப்பும் அழுத்தமும் இன்னும் கூடுதலாகவே வெங்கட் பிரபுவுக்கு இருந்திருக்கும். அதனோடு அவரின் முந்தைய படம் வெற்றிபெதாத அழுத்தமும் சேர்ந்திருக்கும் என்பதால், மனுஷன் அசுரத் தனமாக அப்படியொரு திரைக்கதையை அமைத்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை யாருமே யூகிக்க முடியாத அளவில் அத்தனை திருப்புமுனைகளை எப்படித்தான் யோசித்தாரோ என வியப்பாக இருக்கிறது. (எல்லாம் இருந்தும் கில்லி படத்தில் இருந்த ஏதோ ஒன்று குறைவது போலவும் இருக்கிறது!)
த்ரிஷா, ஐபிஎல் கிரிக்கெட், சிவகார்த்திகேயன் தோனி என்று க்ளைமாக்ஸ் வரை அடுத்தடுத்த ஆச்சர்யங்ளை அளித்திருக்கிறார். இவையெல்லாம் போதாதென்று தளபதியின் ரசிகர்களை உச்சபட்ச குஷிப்படுத்த 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வென்று விஜய்தான் முதலமைச்சர் ஆவார் என்பதை குறிப்பால் சொல்லும் விதமாக படத்தில் விஜய் பயன்படுத்தும் காரின் நம்பர் பிளேட்டில் TN 07 CM 2026 என்று இடம்பெற வைத்திருக்கிறார். அது மட்டுமா? தலை ரசிகர்களையும் குஷிப்படுத்த செம்ம சீன் வைத்திருக்கிறார். அந்தக் காட்சியில் அஜித் ரசிகர்களிடமிருந்து உற்சாகமாய் விசில் பறக்கிறது.
படத்தின் மற்றொரு பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. மனுஷன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மகனிடம் இளையராஜா காப்பிரைட்ஸ் பிரச்னை செய்ய மாட்டார் என்பதாலோ என்னவோ, ஆங்காங்கே இளையராஜாவின் இனிமையான பாடல்களை ஒலிக்கவிட்டு ரசிகர்களை மகிழவைத்திருப்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. மொத்தத்தில் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அதிரடி சரவெடியாக உருவாகியிருக்கும் தி கோட் பெரும்பான்மை மக்களுக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்‘ ஆகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x