சாம்பியன்ஸ் டிராபி எங்கே நடக்கும்?
இன்று ஐ.சி.சி., இறுதி முடிவு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அட்டவணை உள்ளிட்டவை குறித்து ஐ.சி.சி., தரப்பில் இன்று இறுதி முடிவு எடுப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் ஒருநாள் போட்டி தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும். நடப்புத் தொடர், வரும் 2025-ல், பிப். 19 முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடக்க உள்ளது.
கடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக எவ்விதமான இந்திய விளையாட்டு அணிகளும் பாகிஸ்தான் சென்றதில்லை. இதனால் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியை துபாயில் நடத்த வேண்டும், என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஐ.சி.சி.,யிடம் வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் இதனை ஏற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுத்து வருகிறது.

இதனிடையே’டி.வி’ ஒளிபரப்பு நிறுவனம், ஐ.சி.சி., ஒப்பந்தப்படி 90 நாட்களுக்கு முன்பு போட்டி அட்டவணையை வெளியிட வேண்டும் என்பது நியதி. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க இன்னும் 82 நாள் மட்டும் உள்ள நிலையில், போட்டி அட்டவணை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாமல் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அட்டவணை உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க, ஐ.சி.சி., சார்பில் வீடியோ கான்பரன்சிங் வழியாக இன்று முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஐ.சி.சி.,யில் அங்கம் வகிக்கும் நாடுகள் பங்கேற்க உள்ளன.

இதனிடையே ‘டி.வி’ ஒளிபரப்பு நிறுவனம் மற்றும் ஸ்பான்சர்கள் தரப்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் விருப்பப்படி அவ்வணி பங்கேற்கும் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது தான் சரியாக இருக்கும் என கருத்து முன்வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கிரிக்கெட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக பேசி புத்திசாலித்தனமான முடிவெடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.







