இந்தியா 180 ரன்களுக்கு ஆல் அவுட்
அடிலெய்டு பகலிரவு டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்தில், அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்குகிறது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். முதல் பந்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய அந்த பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் வீழ்ந்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார் ஜெய்ஸ்வால்.

இதனையடுத்து 2-வது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல்.ராகுல் (37), சுப்மன் கில் (31) ஓரளவு கைகொடுத்தனர். விராத் கோலி (7), ரோகித் சர்மா (3) விரைவில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். ரிஷாப் பன்ட் (21), அஷ்வின் (22) ரன்களில் வெளியேறினர். நிதிஷ் குமார் ரெட்டி மட்டுமே 42 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். இறுதியில் முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட் சாய்த்து சாதித்தார். கம்மின்ஸ், போலண்ட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின்பு தமது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கவாஜா 13 ரன்களில், பும்ரா பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து மெஸ்வீனி – லபுஸ்சேன் இணை நிதானமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து உள்ளது. மெக்ஸ்வீனி 38, லபுஸ்சேன் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தற்போது இந்தியாவை விட 94 ரன்கள் ஆஸ்திரேலியா பின்தங்கி இருக்கிறது.







