விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார் ஜெயம் ரவி

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த தங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் ஜெயம் ரவி கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில், அக்டோபர் 10 தேதி நடைபெற உள்ளது.

காதல் மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக நேற்று ஜெயம் ரவி அறிவித்திருந்தார். நீண்ட காலமாக காதலித்து வந்த ஜெயம் ரவியும், ஆர்த்தியும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே பிரச்னை இருப்பதாக அண்மையில் பேச்சு எழுந்தது. இந்நிலையில், மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்திருந்தார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிந்தார்.
அதில், “நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து மனுவை ஜெயம் ரவி தாக்கல் செய்துள்ளார்.






