மன்மோகன் சிங் மறைவு – தலைவர்கள் இரங்கல்
7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அவரது மறைவையொட்டி, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13-வது பிரதமராக பதவி வகித்தவர். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரவுபதி முர்மு, குடியரசு தலைவர்

கல்வி, நிர்வாகம் ஆகிய 2 துறைகளையும் எளிமையாக கையாண்ட அரிதான தலைவர் மன்மோகன் சிங். இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முக்கிய பங்களிப்பு அளித்தவர். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை, எளிமை குணம், மனிதாபிமான பண்பு, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றிற்காக, மக்கள் மனதில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார்.
நரேந்திர மோடி, பிரதமர்

நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து இந்தியா வாடுகிறது. எளிமையான பின்னணியில் இருந்து பொருளாதார மேதையாக உயர்ந்தார். நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசு பதவிகள் வசித்தவர், நமது பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள், அறிவுப்பூர்வமானவை. நாட்டின் பிரதமராக இருந்தபோது, மக்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் மன்மோகன் சிங் என பிரதமர் நரேந்திர மோடி புகழ்மாலை சூடியுள்ளார்.
மல்லிகார்ஜுனே கார்கே, தலைவர், காங்கிரஸ்

தொலைநோக்கு பார்வையுடைய அரசியல்வாதி, பொருளாதார வல்லுனரையும் நம் நாடு இழந்துள்ளது. பணிவான மனிதர், தளராத அர்ப்பணிப்பு உணர்வுடன் நம் நாட்டிற்காக உழைத்தவர். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் துறை, ரயில்வே, சமூக நலத்துறை அமைச்சராக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன். தன் பேச்சை விடவும், செயலில் காட்டும் திறன் படைத்தவர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி, காங்கிரஸ்

இந்தியாவை மகத்தான அறிவுடனும் நேர்மையுடனும் மன்மோகன்சிங் ஜி வழிநடத்தினார். அவரது பணிவும், பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதலும் நாட்டை ஊக்கப்படுத்தியது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நான் எனது வழிகாட்டி, குருவை இழந்துவிட்டேன். கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வர் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி X தளத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
7 நாள் துக்கம் அனுசரிப்பு:

மன்மோகன்சிங் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நாட்களில் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது. மன்மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 11 மணிக்கு கூடும் எனவும் ஒன்றின் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







