பள்ளிகளுக்கு தீபாவளி,பொங்கல் விடுமுறை

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலும் சட்டம் நிறைவேற்றம்

அமெரிக்காவில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி, பொங்கல் உள்பட இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கும் சட்டம், பென்சில்வேனியா, நியூயார்க்கை தொடர்ந்து ஓஹியோ மாகாணத்திலும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அமெரிக்கா முழுவதும் சுமார் 33 லட்சம் இந்திய வம்சாவழியினர் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. பல்வேறு கலாச்சாரம், மதங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து வாழும் அமெரிக்காவில், தங்களின் கலாச்சாரம், பண்பாடு, பண்டிகை, விழாக்கள் உள்ளிட்டவற்றை இந்திய வம்சாவழியினர் முழு சுதந்திரத்துடன் கொண்டாடுகின்றனர்.

இதனைப் போற்றும் விதமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வெகுஉற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் சட்டத்தை, முதன் முதலாக பென்சில்வேனியா மாகாணம் கடந்த ஆகஸ்ட் மாதம் இயற்றியது. இதனை வழிமொழிந்து நியூயார்க் மாகாணத்திலும் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் சட்டத்தை, அந்த மாகாண அரசு கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றி அமல்படுத்தியது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி, பொங்கல் உட்பட பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கும் சட்டம், ஓஹியோ மாகாணச் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அம்மாகாண ஆளுநர் மைக் டிவைன் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் இந்து மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை மற்றும் ஆண்டுக்கு 2 இந்து பண்டிக்கைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக மைக் டிவைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதிய சட்டத்தின்படி ஓஹியோவில் உள்ள ஒவ்வொரு இந்து மாணவரும், 2025ம் ஆண்டு தீபாவளிக்கு பொதுவிடுமுறை எடுத்துக் கொள்ளலாம். தீபாவளியுடன் தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி தமிழ் மாணவர் பொங்கல் அல்லது தமிழ் வருட பிறப்புக்கும், குஜராத்தி மாணவர் நவராத்திரிக்கும் விடுமுறை எடுக்கலாம். தெலுங்கு மாணவர் உகாதிக்கும், பெங்காலி மாணவர் துர்கா பூஜைக்கும் விடுமுறை எடுக்கலாம். இஸ்கான் பக்தர்கள் தீபாவளியுடன் கிருஷ்ண ஜெயந்திக்கு விடுமுறை எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

தற்போது பென்சில்வேனியா, நியூயார்க், ஓஹியோ மாகாணங்களை தொடர்ந்து,  இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிற மாகாணங்களிலும், தீபாவளி, பொங்கல் உள்பட இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கும் சட்டத்தை அம்மாகாண பேரவைகள் நிறைவேற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x