தென் கொரிய விமான விபத்து; பறவை காரணமா?

பயணி ஒருவர் உறவினருக்கு அனுப்பிய செய்தி..

முவான், டிச.30; தென் கொரியாவில், 179 பேர் பலி கொண்ட விமான விபத்துக்கு பறவை காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது.

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமானநிலையத்தில் நேற்று (டிச.29)போயிங் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிர் தப்பினார்கள்.
இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கி உள்ள நிலையில், விபத்திற்கு பறவைகள் காரணமா என ஐயம் எழுந்துள்ளது.

பறவைகள் அபாயம் என எச்சரிக்கை..

அந்த விமானம் தரையிறங்க முற்பட்டபோது, பறவைகள் தாக்கும் அபாயம் இருப்பது குறித்து விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விமானிக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த அழைப்புக்கு 2 நிமிடங்களுக்குப் பிறகு, விமானி (MayDay) “மேடே” எனப்படும் பேரிடர் சமிக்ஞையை விடுத்தார். இது உடனடி ஆபத்து அல்லது உயிருக்கு ஆபத்தான அவசர நிலையைக் குறிக்க விமானிகளால் பயன்படுத்தப்படும் அழைப்பாகும். “எனக்கு உதவுங்கள்” என்பது இதன் பொருளாகும்.

இதனைத் தொடர்ந்து விமானத்தை எதிர்திசையில் தரையிறக்க விமானிக்கு, விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குறைந்த எடை கொண்ட சிறிய பறவை மோதுவதால், தரையிறங்கும் கியர் கீழே வராமல் போய்விடும் எனச் சொல்வதற்கில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பயணி அனுப்பிய செய்தி

அதேவேளையில் விமானம் அதன் சக்கரங்கள் மற்றும் தரையிறங்கும் கியரை பயன்படுத்தாமல் ஓடுபாதையை தொடுவதைக் காட்டுவது போன்று ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

அதேசமயம், விமானத்தில் வந்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய செய்தியில், “ஒரு பறவை இறக்கையில் சிக்கிக் கொண்டதாகவும், அதனால் விமானம் தரையிறங்க முடியவில்லை” என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பறவை மீது மோதியதா?

இந்த செய்தியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக விமானநிலை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், விமானம் உண்மையில் ஏதேனும் பறவைக் மீது மோதியதா என்பதை தென் கொரிய அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை. விபத்துக்கு வானிலையும் காரணமாக இருக்கக்கூடுமா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

பறவை மோதி விமானம் விபத்தில் சிக்கிய பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள போதிலும், உயிரிழப்பு ஏற்படக்கூடிய அளவுக்கு அவை இருந்ததில்லை என்றும் தென் கொரிய அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x