செல்போன் கூட இல்லாமல் பரிதவிக்கும் வினோத் காம்ப்ளி
பராமரிப்பு கட்டணம் செலுத்தாததால் வீட்டை இழக்கும் அபாயம்

மும்பை, ஜன.2 ; அதிரடிக்குப் பெயர் போன முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி உழல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் சக பள்ளித் தோழனான காம்ப்ளி, ஒரு காலத்தில் அதிரடியான ஆட்டத்திற்குப் பெயர் போனவர். எதிரிணி பந்துவீச்சாளர்களின் தூக்கத்தை கலைத்த அவர், சிறிது காலத்திலேயே தனது நற்பெயரை இழந்து கிரிக்கெட் உலகில் இருக்கும் இடமே தெரியாமல் போனார்.
போதையிலிருந்து மீள முடியாத காம்ப்ளி

சகவீரரான சச்சின் சாதனைகளைப் படைக்க, காம்ப்ளி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்தார். மதுவிலிருந்து மீள பல முறை சிகிச்சை எடுத்தபோதிலும், அவரால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.
இதுபோன்ற சூழலில், அண்மையில் சிறுநீர் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட வினோத் காம்ப்ளி, தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு காம்ப்ளியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் இரத்த உறைவு இருந்ததை கண்டறிந்தனர்.
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர், இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நேற்று (ஜன.1) மாலை வீடு திரும்பினார். மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த முடியாமல் போனதால், அவரது கிரிக்கெட் உலக நண்பர்கள் உள்ளிட்ட சிலர் உதவினர்.
இந்திய அணியின் ஜெர்சியை அணிந்தபடி காம்ப்ளி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது அவர் வெளியிட்ட புத்தாண்டு செய்தியில், மது மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவை ஒருவரின் வாழ்க்கையை அழித்துவிடும் என்றும் அவர் கூறினார்.
கடும் நிதி நெருக்கடியில் காம்ப்ளி

வினோத் காம்ப்ளி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்ட போதிலும், உணவுப் பழக்க வழக்கம் உள்ளிட்டவற்றில் அவருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மருத்துவர்கள் விதித்துள்ளனர். அவற்றை பின்பற்றத் தவறினால், ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க, காம்ப்ளி தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர், கடந்த 6 மாதங்களாக செல்போன் கூட இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குடியிருக்கும் வீட்டை இழக்கும் அபாயம்

அவர் வைத்திருந்த ஐபோனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்கான 15,000 ரூபாய் கட்டணத்தை செலுத்தத் தவறியதால், அதை கடைக்காரர் எடுத்துச் சென்றுவிட்டார். இதுதவிர, காம்ப்ளியும் குடும்பத்தினரும் வசித்துவரும் வீட்டிற்கான பராமரிப்புக் கட்டணமான 18 லட்சம் ரூபாய் நிலுவையில் இருப்பதால், வீட்டையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அவரது மனைவி ஆண்ட்ரியா ஹெவிட் தெரிவித்துள்ளார்.
வினோத் காம்ப்ளி கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து மாதந்தோறும் ரூ.30,000 ஓய்வூதியாக பெறுவதாகவும், அதனை வைத்துதான் கஷ்ட ஜீவனம் நடத்தி வருவதாகவும் ஆன்ட்ரியா வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், ஒரு அரசியல் கட்சியிடமிருந்து ரூ.5 லட்சத்தை உதவியாகப் பெற்றதாகவும் காம்ப்ளியின் மனைவி ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வினோத் காம்ப்ளியை இன்னும் சில நாட்களில் கிரிக்கெட் மைதானங்களில் காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.







