விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு – டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சியின் தலைவர் எஸ் கே பிரபாகர் அறிவித்துள்ளார். தேர்வுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் இடையே உள்ள காலதூரத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்த வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் டி என் பி எஸ் சி குரூப் 2 குரூப் 2a தேர்வு மையத்தை ஆய்வு செய்த பின்செய்தியாளர்களை சந்தித்த எஸ் கே பிரபாகர், “டிஎன்பிஎஸ்சி வருடாந்திர நாட்காட்டியில் இந்த ஆண்டு 10 தேர்வுகள் நடத்த திட்டமிட்டோம். 8 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டுக்குள் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்த வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 10,315 பேருக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பத்தாயிரம் பேருக்கு வரை வேலை வாய்ப்பு கிடைக்க தேர்வுகள் நடைபெற்று வருகிறது”.

“இந்தத் தேர்வுக்கான விடை குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் போடப்படும் அதில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் மாணவர்கள் பதிவு செய்யலாம். தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை நடக்கும். இந்த முறை தேர்வு நடவடிக்கைகளை முக்கிய கட்டங்களில் வீடியோ பதிவு செய்ய சொல்லி இருக்கிறோம். அதனால் இதுவரை எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை. எல்லா மையங்களிலும் மருத்துவ உதவிகள் மின்சார வசதி ஏற்பாடுகள் பேருந்து வசதி என அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலிருந்து ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த தேர்வுகளை கண்காணிக்க துணை ஆட்சியர் அளவில் பறக்கும் படை செயல்பட்டு வருகிறது”.
“காலி இடங்கள் குறைவாக இருந்தாலும் படித்து முடித்தவர்கள் ஆர்வத்துடன் வந்து தேர்வு எழுதுகிறார்கள். விடைத்தாள்களை திருத்த கூடுதல் பயிற்சி பெற்ற நிபுணர்கள், கூடுதல் ஸ்கேனர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் வழங்கப்படும் பணிகளுக்கு சில படிப்புகளில் இணைத்தன்மை என்ற சான்றிதழ் வாங்க வேண்டும். அதற்கு உயர்கல்வி துறையின் குழு உள்ளது. விரைவாக அந்த சான்றிதழ்களை பெற்று விட்டால் அந்த மாணவர்களும், அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். இணைத்தன்மை வழங்கும் குழுவிடம் விரைந்து இணைத்தன்மை சான்றிதழை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.






