குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம்?
குழந்தை வளர்ப்பு ஆலோசனைகள்

இன்றைய குழந்தைகளுக்கு என்ன சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம். தேர்வுகளில் இலக்கங்களை அடைய இலட்சங்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறோம். இலட்சங்கள் பீஸ் கட்டி படித்தால்தான் குழந்தை மதிப்பெண்களை பெறமுடியும் என்ற பெற்றோர்களின் தவறான புரிதல் பணக்கார பள்ளிகளின் பரிதாபங்கள். அடிப்படை ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய நாம் பரஸ்பர விட்டுக்கொடுத்தலை கற்றுக் கொடுக்க வேண்டிய நாம் அடிப்படையிலேயே தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம். முதல் மார்க் எடுத்த பையன் “ அறிவாளி பையன் ” என்ற புரிதலற்ற பார்வை நம் அறியாமையின் உச்சம் !உடையளன ஊ உடைன 7ஊயைளன
அதுவும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களில் பெற்றோர்களுக்கு ஏற்படும் டென்ஷன் அளவானது ஏன் ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதலாளிக்கே வருமா என்பது சந்தேகமே? மார்க் எடுத்தால்தான் மரியாதை என்ற மாயையை நம்பவைத்து குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து கொண்டிருக்கிறோம். விளைவு குறைந்த மதிப்பெண் குழந்தைகளின் விபரீத முடிவுகள். இதற்கெல்லாம் பெற்றோரை மட்டும் குறை சொல்ல முடியுமா? ஒட்டு மொத்த சமுதாயமே பொறுப்பேற்று மாறிட வேண்டும். பள்ளி விடுமுறையாவது பிள்ளைகள் அவர்கள் அவர்களின் நேரங்களாக செயல்பட விடுகிறோமா என்றால் அதுவும் இல்லை. விதவிதமான எக்ஸ்ட்ரா வகுப்புகளுக்கு பஞ்சமில்லை நீதிநெறி போதிக்கும் வகுப்புகள் தான் இல்லை. அவர்களுக்குள் நாம் உட்புகுந்து கொண்டு நாம் வாழ நினைத்த வாழ்க்கையை, நாம் தொலைத்த வாழ்க்கையை எல்லாம் அவர்கள் மூலம் அடைந்துவிடத் துடிக்கிறோம்.

குழந்தைகள் நம் வழி வந்தவர்கள் தானே ஒழிய நமக்காக வந்தவர்கள் அல்ல. நாம் தோல்வியுற்ற அத்தனையிலும் வெற்றி பெற அவர்கள் அலாவுதீனின் அற்புத பூதங்கள் இல்லை. கார்ப்பரேட் கல்விச் சுழலில் மாட்டிக்கொண்டு நம் பிள்ளைகள் மூச்சுமுட்டிக் கொண்டிருக்கிறார்கள். தனிமனித ஒழுக்கங்கள் மறைந்துபோய் இன்று ஒழுங்கீனங்கள் மின் வலைகள் வழியாக நம் வீடுகளில் மலிந்து கிடக்கின்றன. இணையத்தில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதைக்கூட கவனிக்க நேரமில்லாம் நாமெல்லாம் ஓடி ஓடி சம்பாதித்து கொண்டிருக்கிறோம் பணத்தை.
நேரத்தை சரியாக அனுபவிப்பவனே உண்மையான பாக்கியசாலி. வாழ்க்கைச் சிக்கல்களை, யதார்த்தங்களை திராணியுடன் எதிர்கொள்ள குழந்தைகளைத் தயார் செய்ய உடற்பயிற்சி வகுப்புகளைத் திருடிக்கொல்லாத நன்நெறிகளை உட்புகுத்திய புதிய வகுப்பறை விதிகள் அமைக்கப்படுவதில் பள்ளிகள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பலகலைகள் கற்றால்தான் பிள்ளை என்றில்லை, நம் குழந்தையின் தனித்திறமையை கண்டறிந்து அதன் வழி ஊக்குவிப்பே சரியான அணுகுமுறையாக இருக்கும். நாம் காணாத தங்கத்தை எல்லாம் அவர்களுக்கு காட்ட அவர்களிடம் உள்ள வைரம் என்ற தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது.

இன்றைய அதிவேக, புரிதலற்ற வளர்ப்பு தொடருமேயானால் எதிர்காலச் சந்ததி அர்த்தமற்ற வாழ்க்கை வாழ நேரிடும். கலாச்சார புரிதலோடு குழந்தைகளின் தனித்திறமையை ஊக்குவிக்கவும், உடற்பயிற்சியோடு மனதையும் எதிர்காலத்திற்கு தயார் செய்யும் கல்வியே இந்த தலைமுறைக்கு வேண்டும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதற்கான விதையையாவது ஒவ்வொரு பெற்றோரும் விதைக்க வேண்டும். இல்லாவிடில் புற்களைத்தான் அறுவடை செய்யவேண்டியிருக்கும் எதிர்காலத்தில்.
கட்டுரையாளர- டாக்டர். கு.கவிதா






