ஜப்பானை துவம்சம் செய்த இந்தியா
ஆசியக் கோப்பை கிரிக்கெட்

19 வயதினருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜப்பானை 211 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இமாலய வெற்றியை பதிவுச் செய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில், (யு.ஏ.இ.,) ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் (19 வயது) 11வது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று சார்ஜாவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டி ஒன்றில், நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்த்து ஜப்பான் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜப்பான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

கேப்டன் முகமது அமான் சிறப்பான சதம் விளாசி 122 ரன்கள் அடித்து இறுதி வரை களத்தில் நின்றார். ஆயுஷ் மத்ரே 54, கார்த்திகேயா 57 அரைசதம் கடந்து அசத்தினர். இறுதியில் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது இந்தியா.

340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய ஜப்பான் வீரர்கள், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஹுகோ கெல்லி 50, சார்லஸ் ஹின்ஸ் 35 ஓரளவுக்கு தாக்குப் பிடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டும் ஜப்பானால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தியா சார்பில் சேட்டன் சர்மா, ஹர்திக் ராஜ், கார்த்திகேயா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

இதுவரை ஆடிய 2 போட்டியில் இந்திய அணி, 1 வெற்றி, 1 தோல்வி என 2 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் (‘ரன்-ரேட்’ 1.680) 3-வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தான் (4) (‘ரன்-ரேட்’+1.120), யு.ஏ.இ.(2) (‘ரன்-ரேட்’ 2.040) உள்ளன. நாளை நடக்கும் கடைசி லீக் போட்டியில் யு.ஏ.இ.,வை எதிர்த்து இந்தியா களமிறங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். முன்னதாக தமது முதல் லீக் போட்டியில் இந்தியாவை 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.







