இந்தச் சமூகத்தின் மீது ரத்தச் சிவப்பில் காறியுமிழும் #நந்தன்! #Nandhan

“இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று யாராவது கேட்டால் அவர்களின் கைப்பிடித்து அழைத்துப்போய் காட்ட நான் தயார்” என்ற அறிவிப்போடு தொடங்குவதே – படத்தோடு ஒன்ற நம் மனதை டியூன் செய்து விடுகிறது. முதல் காட்சி தமிழ்த் திரையுலகம் இதுவரை கண்டிராதது என்றே தோன்றுகிறது!
நடிப்பு வகையில், நந்தன் படத்தின் நாயகன் என்றால் அது பாலாஜி சக்திவேல் தான்! பாத்திரத்தோடு பொருந்தி நடிப்பது என்பது ஒருவகை. ஆனால் அந்தப் பாத்திரமாகவே மாறி விடுவது என்பது ஒருவகை. அதைத்தான் பாலாஜி சக்திவேல் செய்திருக்கிறார்! நடை, உடை, பாவனை, பின்னணிக் குரல் என எல்லாவற்றிலும் பாலாஜி சக்திவேல் பட்டையைக் கிளப்பி விட்டார்! முக்கியமாக, படம் முழுவதும் அவரின் கண்களும் பேசுகின்றன! அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக கதையின் நாயகன் சசிகுமார் தன்னால் இயன்றவரை உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். நாயகி சுருதி பெரியசாமியும் அறிமுகப்படம் என்று தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். அவர்களின் பிள்ளையாக வரும் குழந்தை அசத்தியிருக்கிறார்!

“எக்கி எக்கி பாக்குறேன்…” பாடலை திரையரங்கில் பார்த்தபோது… ‘தேன் வந்து பாயுது காதினிலே…’ என்கிற விதமாக நமிதா பாபு குரலும், அவர் பாடியிருக்கும் விதமும் அவ்வளவு இனிமையாக இருக்கிறது. குறிப்பாக கீழாநெல்லி என்ற வார்த்தையைத் தொடர்ந்து வரும் இரு வரிகளில் எஸ் ஜானகியும் எஸ்.பி.பி.யும் இயல்பாகவே செய்யும் ஒரு வித்தையை இந்தப் பெண்ணும் செய்திருக்கிறார் என்று தோன்றியது! அதற்கேற்ப பாடல் வரிகளும் நன்று.
செருப்பு முதல் சிம்மாசனம் வரை மட்டுமின்றி, பாலத்தின் மீதிருந்து அரண்டு பறக்கும் பறவைகள், நீர் நிலையின் மேலே வட்டமடிக்கும் கொக்குக் கூட்டம், மூங்கில் துளையில் முத்தமிடும் வண்டுகள் என பல காட்சிகள் ரம்மியமாய் இருந்தன.
காட்சித் தொகுப்பு நறுக்குத்தெறித்தாற் போல் இருந்தது என்றாலும், அதுவே உச்சக்கட்டக் காட்சிகளின் தீவிரத்தை இன்னும் வீரியமாக பார்வையாளனுக்குக் கடத்தாமல் செய்துவிட்டதோ எனவும் தோன்றியது! இசை இனிமை! பல காட்சிகளுக்கு அதுதான் வலு சேர்த்தது!
கதை – நமது கிராமப் பகுதிகளில் நாம் கண்ட, கண்டு கொண்டிருக்கிற ஒன்றுதான். அதை காத்திரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் இரா. சரவணன். ஆனியன். ஊத்தப்பத்தில் மிளகாய்ப் பொடியை மழைச்சாரல் மாதிரி தூவச் சொன்ன வடிவேலுவைப் போல, சமகால அரசியல் காட்சிகளை கண் முன் கொண்டு வரும் வசனங்களை ஆங்காங்கே தூவி நையாண்டி செய்திருப்பது ரசிக்க வைக்கிறது.

முதல் காட்சியையே செருப்படியாக வைத்தது முதல், கடைசியில் மெய்யான சாட்சிகளையே பேச வைத்தது வரை இயக்கம் சிறப்பு. குறிப்பாக, காட்டுச் செடியையும், கொடிக்கம்பத்தின் கீழ் அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் சிலையையும் கதாபாத்திரங்களாகவே மாற்றியது வெகு சிறப்பு. திருவள்ளுவரைக் காட்டும் காட்சியில்… எந்த திருக்குறள் நம் மனதில் தோன்றுமோ – அதே திருக்குறளை பாதுகை அடிபோல காண்பிப்பதும் அசத்தல்!
ஒரு சில காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்… உதாரணமாக, நாயகன் சுடுகாட்டில் இருந்து ஊருக்குள் நடந்தே சென்று, திரும்பி வந்து பிணம் புதைக்கும் குழியைத் தோண்டி முடிக்கும் வரை – பாடையை தோள் மேல் சுமந்தவர்கள் சுமந்தபடி. மற்றவர்களும் கொட்டும் மழையில் அப்படியே நின்றிருப்பது ஏற்க முடியாதது. கடப்பாரையே இல்லாமல் வெறும் மண்வெட்டியை வைத்துக் கொண்டு 6க்கு 3 அடி குழியை – இடுப்பளவு ஆழத்துக்கு ஒருவரே தோண்டி முடிக்க சில மணி நேரமாவது ஆகும். அப்படி ஒருவர் தோண்டும்போது மற்றவர்கள் உதவ வருவார்களே தவிர வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். குழியில் நிரம்பும் நீருக்கிடையில் வைக்கப்படும் பிணத்தின் முகத்தில் மண்ணைக் கொட்டுவது அவ்வளவு தத்ரூபமாக எடுக்கப்பட்ட காட்சி என்றாலும், அதை பொக்லைன் பக்கெட்டால் கொட்டுவதுபோலத் தெரிவது இயல்பாய் இல்லை; ஆனாலும் அந்தக் குழியில் காண்பிக்கப்படும் “தமிழ் வாழ்க” பலகை அதை மறக்கடித்து விடுகிறது!
ஆண்டாண்டு காலமாய் சமூகத்தின் அழுக்கேறிப்போன மனநிலையோடு, பெரும்பாலான அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்கூட “ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன்ட் அவுட்” என்கிற ரீதியில் சமூக நீதியைக் காப்பதை – வெற்றிலைக் குதப்பிய வாயின் ரத்தச் சிவபப்பில் காறியுமிழ்ந்து சொல்கிறான் நந்தன்! உரைக்க வேண்டியவர்களுக்கு உரைக்காமல் போனாலும், கொஞ்சம் உறுத்லையேனும் ஏற்படுத்துவதே இப்படத்தின் வெற்றி.
கலையை மேம்படுத்துகிறேன் என்று குறியீடுகளால் மட்டுமே காண்பித்து பெரும்பாலானோருக்கு அயர்ச்சியை ஏற்படுத்தாமல், பாமரனுக்கும் புரியும் வகையில் கலகலப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கும் நந்தனை, குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்!
மொத்தத்தில் நந்தன் வரவேற்கப்பட வேண்டியவன்.



