ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
எல்லை தாண்டியதாகக்கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேஸ்வரம், டிச.24; எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் புறப்பட்ட மீனவர்கள் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.
பின்னர் படகுகளில் இருந்த மீனவர்கள் 17 பேரையும் கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
தலைமன்னாரில் வைத்து விசாரணை

தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், விசாரணைக்குப் பிறகு மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பது, ராமேஸ்வரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






