இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் நுசா டெங்கரா மாகாணத்தின், பிளோர்ஸ் தீவில் உள்ள லெவாடோபி லெகி லெகி (Lewotobi Laki Laki) எரிமலை, நேற்று முன்தினம் திடீரென வெடித்து சிதறியது. இதில் 6,500 அடி உயரத்தில் இருந்து தீக்குழம்பாக பாய்ந்தோடி வந்த லாவாக்கள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. அப்போது வெளிவந்த பயங்கர கரும்புகை சுற்றுவட்டாரக் கிராமங்களை சூழ்ந்துள்ளது.
இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி இதுவரை 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் இடிந்த வீடுகளின் அடியில் பலர் புதைந்துள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தற்போது பல கி.மீ. பரப்பளவுக்கு பழுப்பு நிற சாம்பல் படிந்துள்ளதால், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட பல்வேறு மீட்புக் குழுவினர் பிளோர்ஸ் தீவில் முகாமிட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.







