வடகிழக்குப் பருவமழை நிறைவு
இந்திய வானிலை மையம் அறிவிப்பு

வங்காள விரிகுடா கடலோர பகுதிகளை மையமாக கொண்ட வடகிழக்குப் பருவமழை இன்றுடன் (ஜன.,27) விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உட்பட வங்கக் கடலை மையமாக கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதில் கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ., மழை பெய்தது. இது, 2023ம் ஆண்டைவிட, 15 சதவீதம் அதிகம்.

வடகிழக்கு பருவமழை காலத்தில், நெல்லை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களில், இயல்பைவிட மிக அதிகமாக, 59 சதவீதத்துக்கு மேல் மழை பதிவாகி இருந்தது. தென் மாவட்டங்களிலும் இந்த முறை கனமழை கொட்டி தீர்த்தது.

வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் 3வது வாரம் முதல் டிசம்பர் இறுதி வரை வடகிழக்குப் பருவமழை காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை நீடித்து வந்ததால் பல்வேறு தரப்பு மக்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா உட்பட பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையின் அளவு, இயல்பை விட 33% அதிகம் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.








