ஆஸ்திரேலிய ஓபன்; பரிசளிப்பு விழாவில் சலசலப்பு
2 பெண்களின் பெயர்களைக்கூறி கூச்சலிட்ட பார்வையாளர்..!

மெல்போர்ன், ஜன.27; ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பேசியபோது, ஒரு பார்வையாளர், இரண்டு பெண்களின் பெயர்களைக் கூறி கூச்சலிட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.
மெல்போர்னில் நேற்று (ஜன.26) நடைபெற்ற இறுதிப்போட்டியில், இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். தோல்வியைத் தழுவிய ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரன்னருக்கான கோப்பையை பெற்றுக்கொண்டு பேசினார்.
2 பெண்களின் பெயர்களைக்கூறி கூச்சல்

அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்த ஒரு பெண், அலெக்சாண்டர் மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை சுமத்திய இரண்டு பெண்களின் பெயர்களைக் கூறி கூச்சலிட்டார். இதன் காரணமாக, அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தனது பேச்சை பாதியில் நிறுத்தினார்.
இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், “இவ்விசயத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன்; அதனை மீண்டும் பேசப்போவதில்லை” என தெரிவித்தார்.
கூச்சலிட்டவர் அலெக்சாண்டரின் முன்னாள் காதலி

மைதானத்தில் இரண்டு பெண்களின் பெயர்களைக்கூறி சலசலப்பை ஏற்படுத்திய பெண் அலெக்சாண்டரின் முன்னாள் காதலி பிரெண்டா பட்டேயா எனத் தெரியவந்துள்ளது. அவருக்கு, அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மூலம் ஒரு மகள் உண்டு.







