2025-ஐ வரவேற்க ஜார்ஜியா நகரம் அதிரடி திட்டம்
புத்தாண்டுக்காக தகர்க்கப்படுகிறது 16 மாடி ஓட்டல்..!

மதுபான கொண்டாட்டம், ஆடல் – பாடல் கேளிக்கை, விண்ணை வண்ணமயமாக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றுடன் புத்தாண்டை வரவேற்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு பிரமாண்டமான கட்டடத்தை தகர்த்து புத்தாண்டுக்கு வரவேற்பு தெரிவிக்க, ஒரு நகரம் தயாராகி வருகிறதென்றால் அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
ஆம், இது நிகழவிருக்கும் இடம் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா நகரம். வரும் 2025ஆம் ஆண்டை வரவேற்கத்தான் இத்தகைய அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளது ஜார்ஜியா நகர நிர்வாகம். இதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது ஜார்ஜியாவில் உள்ள அரை நூற்றாண்டு பழமையான 16 அடுக்குகளைக் கொண்ட ரமடா பிளாசா என்ற ஹோட்டல். 1970ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தங்கு விடுதி, அந்தக் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
பல பிரபலமான நபர்கள் வந்து தங்கிச் சென்ற போதிலும், போதிய வருவாய் இல்லாததால் அந்த ஓட்டல் நிர்வாகம் திணறியது. இதனால் அந்த தங்கு விடுதியை திவாலானதாக அறிவித்து அதனை நியூயார்க் வங்கித் துறை கைப்பற்றியது. ரமடா பிளாசா தங்கு விடுதி வங்கிக்கடன் மோசடி மற்றும் Bank of Credit and Commerce International எனப்படும் சர்வதேச கடன் மற்றும் வர்த்தக வங்கியுடன் இணைந்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஈராக்கின் கச்சா எண்ணெய் லாபத்தை மறைக்க முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு உதவியதாகவும், ஈரான் உடனான ஆலிவர் நார்த்தின் ஆயுத ஒப்பந்தங்களை ஆதரித்ததாகவும் Bank of Credit and Commerce International வங்கி மீது புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ஜார்ஜியா நகரில் உள்ள ரமடா பிளாசா ஓட்டல் முடக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு மூடப்பட்டது.
மியாமி கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற ஓட்டல்களை வடிவமைத்து கட்டிய முன்னணி கட்டடக் கலைஞரான மோரிஸ் லாபிடஸ் என்பவரால் ரமடா பிளாசா ஓட்டல் கட்டப்பட்டது. ஆனால், கட்டமைப்பு ரீதியாக புதுப்பிக்க முடியாத நிலையில் அந்த விடுதி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகவே, அந்த ஓட்டலை தகர்க்க முடிவு செய்து, அதனை ஜார்ஜியா நகர நிர்வாகம் வாங்கியுள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதியன்று, புத்தாண்டை வரவேற்கும் வகையில் ரமடா பிளாசா ஓட்டல் இடித்து தகர்க்கப்பட உள்ளது. சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி ரமடா பிளாசா ஓட்டலை தரைமட்டமாக்க ஜார்ஜியா நகர நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது.
டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு உலகெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் ஒலிக்கவிருக்கும் வேளையில், ஜார்ஜியா நகரம், ரமடா பிளாசா ஓட்டல் இடித்து தரைமட்டமாக்கப்படும் போது எழவிருக்கும் பயங்கர ஓசையுடன் 2025ஐ வரவேற்க தயாராகி வருகிறது.







