உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம்

தமிழ்நாடு வீரர் குகேஷ் வென்றார்

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தமிழ்நாடு வீரர் குகேஷ் புதிய சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் 18 வயதில் இந்த பட்டத்தை கைப்பற்றிய இளம் வீரர் என்ற புதிய வரலாறு படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் கோப்பையை வென்று, உலக ஆடவர் செஸ் தரவரிசையில் 5 இடத்தில் உள்ள இந்தியாவின் குகேஷ்வுடன்(18), ‘நடப்பு உலக சாம்பியனும்’, சர்வதேச ஆடவர் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள சீனாவின் டிங் லிரென் (32) மோதினார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில், 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளி பெற்று சம நிலையில் இருந்தனர்.

இன்று பரபரப்பான 14-வது மற்றும் கடைசி சுற்றுப் போட்டி நடந்தது. இதில் வெல்லும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற நிலையில், குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். போட்டியின் 50 வது நகர்த்தலின் போது, இந்த ஆட்டம் டிராவை நோக்கிச் சென்றது போல இருந்தது. அப்போது லிரென் தனது யானையை தவறான இடத்தில் நகர்த்தி பெரிய தவறு செய்தார்.

இதனை சரியாக பயன்படுத்திய குகேஷ், 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு போட்டியின் 58வது நகர்த்தலில் சமார்த்தியமாக வெற்றி பெற்றார். இதன்மூலம் 7.5 புள்ளிகள் பெற்று புதிய உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ். அத்துடன் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் ஆன இளம் வீரர் என்னும் புதிய சரித்திர சாதனையையும் படைத்தார். அப்போது குகேஷ் ஆனந்த கண்ணீர் வடித்து காண்போரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். குகேஷுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், என்னை நேசித்து வரும் இந்தியு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். டிங் லீரென் தோல்விக்கு எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். 2 வருடங்கள் பயிற்சிக்கு பின்பு இந்த வெற்றி கிடைத்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாம்பியன் பட்டம் இந்தியாவிடம் இருந்து பறிக்கப்பட்டது. தற்போது ஒரு இளம் செஸ் வீரரின் கனவு மூலம் மீண்டும் நிறைவேறி உள்ளது என ஆனந்தத்துடன் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் (55) 5 முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் (2007-2013) பட்டம் வென்று சாதித்திருந்தார். அவருக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் ஆன 2-வது இந்தியர் எனும் பெருமையை 18 வயதே ஆன குகேஷ் பெற்றுள்ளார். இருவரும் தமிழர்கள் என்பதில் தமிழ் கூறும் நல்லுலகம் பெருமைக் கொள்கிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x