ரஜினி எனும் மந்திரச் சொல்லுக்கு வயது 74
இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்வது எப்படி?

“எனக்கு பெரிதாக நடிக்க வராது” – பல மேடைகளில் ரஜினி அடிக்கடி உதிர்த்த வார்த்தை. தன்னடக்கத்துடன் அவர் பேசிய பேச்சு என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், ரஜினி ஒரு அசாத்திய திறமை படைத்த நடிகர் என்பதை அனைவரும் அறிவர். தமிழ்த் திரையுலகில் அபூர்வ ராகங்களாக அறிமுகமான அவரை, மூன்று முடிச்சு படம் சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அப்படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பு பலராலும்பேசப்பட்டது.
ஆரம்பத்தில் ரஜினி ஏற்று நடித்ததெல்லாம் எதிர்மறை, அதாவது வில்லன் வேடம் தான். அதில் 16 வயதினிலே, காயத்ரி, புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்கள் ரஜினிக்கு பெயர் வாங்கித் தந்தன. முள்ளும் மலரும், அதன் பின்னர் அவள் அப்படித்தான், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்கள் ரஜினியின் நடிப்புத் திறமைக்கு தீனி போட்டன. அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம், ‘முள்ளும் மலரும்’. காளி என்ற வேடத்தில் ரஜினியை முற்றிலும் புதிய பரிமாணத்தில் காட்டி அவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது இயக்குநர் மகேந்திரன்.

அப்படத்தில் ரஜினி பேசிய, “கெட்ட பய சார் இந்த காளி..” என்ற வசனம் இன்றும் பரவலாக உச்சரிக்கப்படுகிறது. ரஜினியின் நடிப்பை ரசிகர்கள் வியந்து பார்த்தபோது, Action ஹீரோ என்ற அடையாளத்திற்குள் திணிக்கப்பட்டார். அந்த வகையில் பல படங்கள் அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றன. குறிப்பாக மூன்று முகம் படம், அதிலும் அந்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற கதாபாத்திரம். மூன்று முகம் அதிரடி வில்லன் நடிகர் செந்தாமரையுடன் ரஜினி மோதும் காரசாரமான காட்சிகளின் போது திரையரங்குகளில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது.
Action ஹீரோவாக உருவெடுக்கத் தொடங்கிய ரஜினியை தில்லு முல்லு படத்தில் முழுநீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைத்து அனைவரையும் வியக்க வைத்தார், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், தர்மதுரை, தம்பிக்கு எந்த ஊரு என ரஜினியின் வெற்றிப்பட வரிசை நீளம். சிகரம் தொட்ட பின்னர் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்ற போதிலும் பாட்ஷா, அண்ணாமலை, படையப்பா போன்ற படங்கள் அந்தக் குறையைப் போக்கின.
ரஜினி மறக்க விரும்பும் ‘பாபா’
தனது திரையுலக வாழ்க்கையில் ரஜினி மறக்க விரும்பும் படமாக ‘பாபா’ படம் இருக்கும் எனக் கூறலாம். ஆனாலும், அந்தத் தோல்வியிலிருந்து அவரை மீட்டெடுத்தது சந்திரமுகி திரைப்படம். 300 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக் குவித்ததுடன், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தக்க வைக்கவும் அப்படம் கைகொடுத்தது.

ரஜினி என்றைக்குமே ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகராகத்தான் இருக்கிறார். புதிய இயக்குநர்களுடன் கைகோர்த்து கால மாற்றத்திற்கேற்ற படங்களைத் தர அவர் எப்போதுமே தயங்குவதில்லை. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் ‘தளபதி’ ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.







