கேல் ரத்னா விருதுக்கு குகேஷ் தேர்வு
அர்ஜூனா விருதுக்கு நித்யஸ்ரீ, துளசிமதி, மனிஷா தேர்வு

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாட்டு சதுரங்க வீரர் குகேஷ் கேல் ரத்னா விருதுக்கும், தமிழகத்தின் பாரா ஒலிம்பிக் வீராங்கனைகள் நித்யஸ்ரீ, துளசிமதி, மனிஷா ஆகியோர் அர்ஜூனா விருதுக்கும் தேர்வாகி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களை போற்றும் வகையில் ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் நாட்டின் உயரிய விளையாட்டு விருதுகளை அறிவிக்கும். அவர்களுக்கு குடியரசு தலைவர் விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாட்டு வீரர் தொம்மராஜூ குகேஷ், ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியரான மனு பாக்கர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரிஸ், டோக்கியோ பாரா ஒலம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு, நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேல் ரத்னா விருதுக்கு மனு பாக்கர் பெயர் முதலில் பரிந்துரை செய்யாதது கடும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது, பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழகத்தின் பேட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன்(காஞ்சிபுரம்), நித்யஸ்ரீ சுமதி சிவன்(கரூர்), மனிஷா ராமதாஸ் (திருவள்ளூர்) உட்பட 34 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஒற்றையர் பிரிவில் துளசிமதி வெள்ளிப் பதக்கமும், நித்யஸ்ரீ, ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளில் 3 வெண்கலமும், மனிஷா ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் வென்று அசத்தினர்.

பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்கு கேரளாவின் எஸ்.முரளிதரன் உட்பட 5 பேர் தேர்வாகி இருக்கின்றனர். இதனையடுத்து கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா விருதுகளுக்கு தேர்வான சாதனையாளர்களுக்கு, டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில், வரும் 17ம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் மற்றும் பாராட்டு பத்திரங்கள் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.








