குடும்பமே கொல்லப்பட்டதை அறியாத பிணைக்கைதி
உயிருடன் இருப்பதாக நினைத்து, காணச் செல்கிறேன் எனக்கூறிய பரிதாபம்

ஜெருசலேம், பிப்.09; காசாவில் விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் பணயக்கைதி ஒருவர், தனது குடும்பமே கொல்லப்பட்டது தெரியாமல் “அவர்களை காண மகிழ்ச்சியுடன் செல்கிறேன்” எனக் கூறியதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 3 இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு நேற்று விடுவித்தது. அவர்களில் ஷராபி என்பவரும் ஒருவர்.
491 நாட்கள் ஹமாஸின் பிடியிலிருந்தவர் விடுவிப்பு

491 நாட்கள் ஹமாஸின் பிடியிலிருந்த அவர், செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர், “நான் எனது மனைவியையும், குழந்தைகளையும் காண மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு செல்கிறேன்” என்று கூறியதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனைவி & குழந்தைகள் கொல்லப்பட்டதை அறியவில்லை

ஆனால், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஷராபியின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொல்லப்பட்டதை அவர் அறிந்திருக்கவில்லை.
தாக்குதல் நடந்தபோது வெளியே சென்றிருந்த ஷராபி, பின்னர் ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.
விடுவிக்கப்பட்டவரின் மெலிந்த தோற்றத்தை பார்த்து உறவினர்கள் கவலை

ஹமாஸின் பிடியிலிருந்த ஷராபியின் சகோதரர் யோசி ஷராபி உயிரிழந்துவிட்ட செய்தி ஷராபிக்கு தெரிவிக்கப்பட்டது.
காசாவில் விடுவிக்கப்பட்ட ஷராபியின் மெலிந்த, சோர்வான தோற்றத்தை தொலைக்காட்சிகளில் பார்த்த பிரிட்டனில் உள்ள அவரது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.







