மன்மோகன் சிங்; பொருளாதார சீர்திருத்த சிற்பி

விருப்பமின்றி நிதியமைச்சரானவர் விரும்பப்படும் ஆளுமையானார்..!

டெல்லி, டிச.27; இந்தியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்திருக்கும் மன்மோகன் சிங், இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் சிற்பியாக பாராட்டப்படுகிறார்.

பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற மன்மோகன் சிங், ஐநா சபையின் அவையின் வர்த்தக மேம்பாட்டுக்கான பிரிவில், 1966 முதல் 1969 வரை, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான ரவுல் ப்ரீபிஷ் (Raul Prebish) தலைமையில் பணியாற்றிய பெருமை பெற்றவர். பின்னர் இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக தொடங்கி நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சக செயலாளர், திட்டக்குழு துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் என பல பதவிகளை வகித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நன்மதிப்பை பெற்றவர்.

பிரிவினை தொடங்கி பிரதமர் வரை

1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி ஒருங்கிணைந்த இந்தியாவில் (Gah) கா எனும் சிற்றூரில் பிறந்தார் மன்மோகன் சிங். தற்பொழுது அந்த ஊர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.

நாட்டின் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்களில் மன்மோகனின் குடும்பமும் ஒன்று.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வி கற்ற மன்மோகன் சிங் 1962இல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கௌரவமிக்க ஆடம் ஸ்மித் பரிசை வென்றவர் மன்மோகன்.

பல்வேறு பட்டங்களைப் பெற்ற அவர், 1971இல் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக அரசுப் பணியில் சேர்ந்தார். ஒரே ஆண்டிலேயே அவருக்கு அடுத்த முக்கியப் பதவி கிடைத்தது. 1972இல் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் 1985 முதல் 1987 வரை திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

அழைப்பால் அனைத்தும் மாறின

1991ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று நரசிம்மராவ் தலைமையில் ஆட்சி அமைந்தபோது அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கியிருந்தது.

அந்த காலகட்டத்தில் அரசியல் பதவி எதையும் வகிக்காத மன்மோகன்சிங், நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அன்றைக்கு அதனை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். அவர் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க காரணமாக இருந்தது ஒரு தொலைபேசி அழைப்பு என்றால் பலருக்கும் வியப்பாக இருக்கலாம்.

ஆம், அதுபற்றி மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் எழுதிய ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, நாடு திரும்பியிருந்தார் மன்மோகன்.

அன்றிரவு, மன்மோகன் சிங்கின் மருமகன் விஜய் தங்கா தொலைபேசி அழைப்பு எடுத்தார். மறுமுனையில் கேட்டது அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரியவரான பி.சி.அலெக்சாண்டரின் குரல். இவர், பிற்காலத்தில் தமிழ்நாடு ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

அப்போது உறக்கத்தில் இருந்த மன்மோகன் சிங்கை எழுப்பும்படி அலெக்சாண்டர் வற்புறுத்தினார். பிறகு சில மணி நேரங்கள் கழித்து மன்மோகனும் அலெக்சாண்டரும் சந்தித்தனர்.

நிதி அமைச்சரானது எப்படி?

சந்திப்பின் போது, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தனது அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை மன்மோகன் சிங்கிற்கு அளிக்க விரும்புவதாக அலெக்சாண்டர் எடுத்துரைத்தார்.

ஆனால், இதுபற்றி யோசித்து முடிவெடுக்க மன்மோகனுக்கு நரசிம்ம ராவ் போதிய அவகாசம் வழங்கவில்லை. தான் நிதி அமைச்சராவதை தனது குடும்பத்தினரும் விரும்பவில்லை என்று மன்மோகன் சிங்கே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிற அமைச்சர்களுடன் நிதியமைச்சராக மன்மோகன் சிங் பதவியேற்றார். பிறகு நடந்ததெல்லாம் வரலாறு என்பதை அனைவரும் அறிவோம்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x