போதையில் காரை இயக்கி 2 சிறார் உயிரிழந்த வழக்கு
இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை

நியூயார்க், பிப்.08; அமெரிக்காவில், குடிபோதையில் அதிவேகமாக காரை இயக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழக்க காரணமான வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வந்த 36 வயதான அமன் சிங் என்பவர், அதிகளவு மது அருந்தியதுடன், கோகைன் என்ற போதைப் பொருளையும் உட்கொண்டுவிட்டு மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கியுள்ளார்.
குடிபோதையில் காரை இயக்கி 2 சிறார் உயிரிழந்த விபத்து

தறிகெட்டு சென்ற கார் நான்கு சிறார்கள் மீது பயங்கரமாக மோதியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். இருவர் உயிர் தப்பினர்.
இது தொடர்பான வழக்கில், அமன் சிங்கிற்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக நியூயார்க் நீதிமன்றம் அறிவித்தது.
25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

வழக்கின் தீர்ப்பை அறிந்துகொள்ள, உயிரிழந்த சிறார்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டிருந்ததால், அவர்கள் தங்குவதற்கு நீதிமன்றத்தில் இரண்டு கூடுதல் அறைகள் திறக்கப்பட்டன.
அவர்கள் அனைவரும் அமன் சிங்கை கடுமையாக தூற்றினர். அவர்களது கோபம் முற்றிலும் நியாயமானது என்று அமன் சிங் தெரிவித்தார்.
நான் செய்தது மிகப்பெரிய பாவம்: குற்றவாளி அமன் சிங்

“இது அனைத்தும் எனது தவறு; ஒரு குழந்தையை இழப்பது மிகப்பெரிய துக்கம்; நான் பெரிய பாவம் செய்துவிட்டேன்; அதில் யாராவது இறந்திருக்க வேண்டுமெனில், அது நானாகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்று அமன் சிங் நீதிபதியிடம் தெரிவித்தார்.







