H1-B விசா; இந்தியர்களின் எதிர்காலம் ஊசலாட்டம்
அனைத்தும் தலைகீழாக மாறுமா? லட்சக்கணக்கானோர் கவலை

வாஷிங்டன், ஜன.22; அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதால், H1-B விசாவில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் நிச்சயமற்ற நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல்வேறு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதன்படி, அமெரிக்காவில் பிறந்த பிற நாட்டவரின் வாரிசுகளுக்கு குடியுரிமை வழங்குவது ரத்து செய்யப்படுவதாக, ட்ரம்ப் அறிவித்தார்.
லட்சக்கணக்கான இந்தியர்களின் எதிர்காலம்..?

இதனால் அமெரிக்காவில் உள்ள H1-B விசா வைத்திருக்கும் லட்சக்கணக்கான இந்தியக் குடும்பத்தினர் ஊசலாட்டத்தில் உள்ளனர். அதிபரின் அதிரடி அறிவிப்பு அமெரிக்க குடியேற்றக் கொள்கை மற்றும் அதன் தாக்கங்கள் மீது காரசாரமான விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
ட்ரம்ப் உத்தரவால் தலைகீழாக மாறுகிறதா?

ஏற்கனவே H1-B விசா வைத்துள்ள இந்தியர்களுக்கு இந்த புதிய உத்தரவால் அனைத்தும் தலைகீழாக மாறும் என்று அஞ்சப்படுவதால், அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அவர்கள், அமெரிக்க குடியுரிமை குறித்து நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் வேளையில், தங்கள் குழந்தைகளின் பிறப்புரிமை குடியுரிமையை பெரிதும் நம்பியிருந்த இந்தியப் பெற்றோருக்கு, அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவால் நிலைகுலைந்து போயுள்ளனர்.







